டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை
|டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
புதுடெல்லி,
நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளை கைப்பற்றியது. இதில் பா.ஜ.க. 240 தொகுதிகளை கைப்பற்றியது. காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி மட்டும் 99 இடங்களை பெற்றுள்ளது. இரு அணிகளையும் சேராத கட்சிகள் 17 இடங்களை பிடித்துள்ளன.
தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா, ராஜ்நாத் சிங், அமித்ஷா, பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு,மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, லோக் ஜனசக்தி கட்சி தலைவர் சிராக் பாஸ்வான் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்றனர்.
இந்த நிலையில் இதைத் தொடர்ந்து இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் நடைபெறும் இந்த கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல்காந்தி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் அபிஷேக் பானர்ஜி, ஆம் ஆத்மி சார்பில் சஞ்சய் சிங் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று தெரிகிறது. புதிய ஆட்சி அமைக்கவும், வியூகம் அமைக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.