< Back
தேசிய செய்திகள்
இந்தியா கூட்டணிக்கு முக்கியத்துவம் வாய்ந்த மும்பை கூட்டம்; தலைவர்களின் வியூகம் என்ன?
தேசிய செய்திகள்

'இந்தியா' கூட்டணிக்கு முக்கியத்துவம் வாய்ந்த மும்பை கூட்டம்; தலைவர்களின் வியூகம் என்ன?

தினத்தந்தி
|
30 Aug 2023 4:00 AM IST

அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் 10 ஆண்டுகளாக ஆட்சி அரியணையில் உள்ள பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு உள்ளன.

இந்தியா கூட்டணி

ஐக்கிய ஜனதாதள தலைவரும், பீகார் முதல்-மந்திரியுமான நிதிஷ்குமார் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை தீவிரமாக செய்து, தனது மாநிலமான பீகார் தலைநகர் பாட்னாவில் கடந்த ஜூன் மாதம் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை கூட்டினார். எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் அறிமுக அளவில் அமைந்த இந்த கூட்டத்தில், 16 கட்சிகள் பங்கேற்றன.

அடுத்ததாக கடந்த மாதம் 17, 18-ந் தேதிகளில் கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் நடந்த கூட்டத்தில் 26 கட்சிகள் பங்கேற்றன. இது எதிர்க்கட்சியினருக்கு புது தெம்பை அளித்தது. பெங்களூரு கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கூட்டணி குழந்தைக்கு 'இந்தியா' என்று பெயரிடப்பட்டது. கூட்டணிக்கு வைக்கப்பட்ட இந்த பெயர் நாடு முழுவதும் மக்களை சென்று அடைந்து இருப்பதாக எதிர்க்கட்சிகள் நம்புகின்றன.

மும்பையில் 3-வது கூட்டம்

இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் 3-வது கூட்டம் மராட்டிய மாநில தலைநகர் மும்பையில் நாளை (வியாழக்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது. இந்த கூட்டத்திற்காக எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மும்பையில் குவிகிறார்கள்.

மும்பையில் உள்ள 'கிராண்ட ஹயாத்' நட்சத்திர ஓட்டலில் நடைபெறும் இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர் கலந்து கொள்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் (தி.மு.க.), பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் (ஐக்கிய ஜனதா தளம்), மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி (திரிணாமுல் காங்கிரஸ்), டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் (ஆம் ஆத்மி), பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் சிங் மான் (ஆம் ஆத்மி), ஜார்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் (ஜார்கண்ட் முக்தி மோர்சா) ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக மராட்டிய மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே கூறியுள்ளார். இதுதவிர ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலுபிரசாத் யாதவ், பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் கலந்து கொள்ள உள்ளனர்.

கட்சிக்கு 3 பேர் மட்டுமே கலந்து கொள்ள முடிவு செய்யப்பட்டு இருப்பதால் காங்கிரஸ் ஆளும் கர்நாடகா, ராஜஸ்தான், சத்தீஷ்கார் மாநில முதல்-மந்திரிகள் 'இந்தியா' கூட்டணி கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார்கள் என கூறப்படுகிறது.

முக்கிய வியூகம்

முதல் 2 கூட்டங்கள் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் நடந்தன. ஆனால் 3-வது கூட்டம் பா.ஜனதா கூட்டணி ஆளும் மராட்டியத்தில் நடைபெறுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மேலும் முதல் 2 கூட்டத்திலும் எதிர்க்கட்சிகள் வியூகம் தொடர்பாக முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை. ஆனால் மும்பையில் நடைபெறும் 3-வது கூட்டம் இந்தியா கூட்டணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைய உள்ளது.

கூட்டணியில் உள்ள பெரிய கட்சியான காங்கிரஸ் பல மாநிலங்களில், மாநில கட்சிகளுடன் குடுமிப்பிடி சண்டை போட்டுக்கொண்டு இருந்த நிலையில், அந்த கட்சிகள் எல்லாம் ஒரு குடையின் கீழ் வந்துள்ளன.

மும்பை கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பான முக்கிய வியூகம் வகுக்கப்பட உள்ளது. குறிப்பாக தொகுதி பங்கீடு தொடர்பாக விரிவாக விவாதிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. தொகுதி பங்கீடு விவகாரம்தான் இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது. தொகுதி பங்கீடு விவகாரத்தில் சில கட்சியினருக்கு உடன்பாடு இல்லாமல் போகலாம். இதனால் மும்பை கூட்டம் எதிர்க்கட்சியினருக்கு 'பிரசவம்' போன்றதாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

ஒருங்கிணைப்பு குழு

மும்பை கூட்டத்தில் இந்தியா கூட்டணிக்கு ஒருங்கிணைப்பு குழுவை உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் இறுதி செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா கூட்டணியின் இலச்சினையும் இந்த கூட்டத்தில் வெளியிடப்படுகிறது.

கடந்த தடவை பங்கேற்ற கட்சிகளின் எண்ணிக்கையை விட மும்பை கூட்டத்தில் கூடுதலாக சில கட்சிகள் சேரும் என்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

மொத்தத்தில் எதிர்க்கட்சி தலைவர்களை வரவேற்க மும்பை மாநகரம் விறுவிறுப்புடன் தயாராகி வருகிறது. பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.

மேலும் செய்திகள்