ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதில் இந்தியா உலகிற்கு முன்னுதாரணமாக திகழ்கிறது- பிரதமர் மோடி பேச்சு
|பாதுகாப்பான உலகை உருவாக்க அனைத்து நாடுகளும் பொறுப்பேற்க வேண்டும் என பிரதமர் மோடி பேசினார்.
புதுடெல்லி,
இன்டர்போல் எனப்படும் சர்வதேச காவல் அமைப்பின் பொதுச்சபை கூட்டத்தை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று துவக்கி வைத்தார். சர்வதேச அளவில் போலீஸ் துறையில் நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இன்டர்போல் அமைப்பில் மொத்தம் 195 நாடுகள் இடம்பெற்றுள்ளன.
இன்டர்போலின் 90வது பொதுச்சபை அக்டோபர் 18 முதல் 21 வரை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் 195 இன்டர்போல் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த மந்திரிகள், நாடுகளின் போலீஸ் அமைப்பின் தலைவர்கள், தேசிய மத்திய பணியகங்களின் தலைவர்கள் மற்றும் மூத்த போலீஸ் அதிகாரிகள் அடங்கிய பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
இன்டர்போல் பொதுச்சபை கூட்டத்தை தொடங்கி வைத்து பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-
பன்முகத்தன்மை மற்றும் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதில், இந்தியா உலகிற்கு முன்னுதாரணமாக திகழ்கிறது. சட்ட கட்டமைப்பில் வேறுபாடுகள் இருந்தபோதிலும்கடந்த 99 ஆண்டுகளில், இன்டர்போல் 195 நாடுகளில் உள்ள போலீஸ் அமைப்புகளை உலகளவில் இணைத்துள்ளது.
உலகத்தை சிறந்த இடமாக மாற்ற உலகளாவிய ஒத்துழைப்பு மிக அவசியம். ஐ.நா அமைதிப் படைக்கு அதிக பங்களிப்பை அளிக்கும் நாடு இந்தியா. அதுமட்டுமல்ல, காலநிலை இலக்குகள் முதல் கொரோனா தடுப்பூசி வரை உலகிற்கு ஏற்படும் எந்தவொரு நெருக்கடிக்கும் தீர்வு காண்பதற்கான விருப்பத்தை இந்தியா வெளிப்படுத்தியுள்ளது. பாதுகாப்பான உலகை உருவாக்க அனைத்து நாடுகளும் பொறுப்பேற்க வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.