சுதந்திர தின விழா; இந்தியா-வங்காளதேச எல்லையில் இனிப்புகளை பகிர்ந்து கொண்ட ராணுவத்தினர்
|சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்தியா-வங்காளதேச எல்லையில் இருநாட்டு ராணுவ வீரர்களும் இனிப்புகளை பகிர்ந்து கொண்டனர்.
கொல்கத்தா,
இந்தியாவின் 78-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. 'வளர்ச்சியடைந்த பாரதம் 2047' என்ற கருப்பொருளுடன் இந்த ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் இன்று காலை பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றிவைத்து உரையாற்றினார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, வங்காளதேசத்தில் உள்ள இந்துக்கள் மற்றும் சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து 140 கோடி இந்தியர்களும் கவலை கொண்டுள்ளனர் என்று குறிப்பிட்டார். மேலும், இந்தியா எப்போதும் மனிதகுலத்தின் நன்மையை விரும்பும் நாடு என்றும், நமது அண்டை நாடுகளின் நலனில் நாம் எப்போதும் அக்கறை கொண்டிருக்கிறோம் என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில், இந்தியாவின் சுதந்திர தின விழாவை முன்னிட்டு மேற்கு வங்காள மாநிலம் ஜல்பைகுரி பகுதியில் உள்ள இந்தியா-வங்காளதேச எல்லையில், இருநாடுகளைச் சேர்ந்த ராணுவ வீரர்களும் இனிப்புகளை பகிர்ந்து கொண்டனர். அப்போது இந்திய ராணுவத்தினருக்கு வங்காளதேச ராணுவத்தினர் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்தனர்.