காஷ்மீரில் சுதந்திர தின விழா உற்சாக கொண்டாட்டம்: பாதுகாப்பு கெடுபிடிகள் தளர்வு
|காஷ்மீரில் பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்க சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் உற்சாகமாக நடைபெற்றன. பாதுகாப்பு கெடுபிடிகள் வெகுவாக தளர்த்தப்பட்டிருந்தன.
ஸ்ரீநகர்,
காஷ்மீரில் பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக, சுதந்திர தினம், குடியரசு தினம் போன்றவற்றின்போது பலத்த பாதுகாப்புக்கு இடையில், இறுக்கமான சூழலில் நிகழ்ச்சிகள் நடைபெறும். கடைகள், வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருக்க, மக்கள் வீடுகளுக்குள் முடங்குவார்கள்.
ஆனால் இந்த சுதந்திர தினத்தின்போது ஓர் இனிய அதிர்ச்சியாக, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தாங்களாக விருப்பத்துடன் பங்கேற்க, உற்சாகமாக கொண்டாட்டங்கள் நடைபெற்றன. பாதுகாப்பு கெடுபிடிகளும் வெகுவாக தளர்த்தப்பட்டிருந்தன.
சுதந்திரமாக உலா
தலைநகர் ஸ்ரீநகரில் வழக்கமான இரும்புக்கம்பி வேலி, தடுப்புகளை காண முடியவில்லை. மக்கள் சுதந்திரமாக உலா வந்தனர்.
போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தபோதிலும், ஆங்காங்கே வாகன சோதனை நடைபெற்றாலும், போக்குவரத்துக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை.
குவிந்த மக்கள்
சுதந்திர தினத்தின் பிரதான விழா, 5 ஆண்டுகளுக்குப் பிறகு, சீரமைக்கப்பட்ட பக்ஷி விளையாட்டரங்கில் நடைபெற்றது. அங்கு துணைநிலை கவர்னர் மனோஜ் சின்கா தேசியக்கொடியை ஏற்றிவைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
இங்கு அணிவகுப்பு, கொண்டாட்டங்களை சுமார் 20 ஆயிரம் பொதுமக்கள் நேரில் கண்டு ரசித்தனர். அவர்களில் பலர் வெளிமாவட்டங்களில் இருந்து வந்திருந்தனர்.
'செல்பி' எடுத்து உற்சாகம்
குழந்தைகளுடன் குடும்ப சகிதமாக வந்திருந்த அவர்களில் ஏராளமானோர், தேசியக்கொடியை ஏந்தியிருந்தனர். சுதந்திர தின விழாவை நினைவில் வைத்துக்கொள்ளும்விதமாக 'செல்பி'யும் எடுத்துக்கொண்டனர். கட்டுப்பாடுகள் இன்றி சுதந்திர தின விழா கொண்டாட்டங்களில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிப்பதாக அவர்கள் கூறினர்.
காஷ்மீரின் பல்வேறு மாவட்டங்களிலும், ஸ்ரீநகரின் மையப்பகுதியான லால் சவுக்கிலும் சுதந்திர தின உற்சாகம் வெளிப்படையாக தெரிந்தது.
இணைய சேவைக்கு தடை இல்லை
சுதந்திர தினம், குடியரசு தினத்தின்போது காஷ்மீரில் செல்போன், இணைய சேவைக்கு தடை விதிக்கப்படுவது வழக்கம். ஆனால் தொடர்ந்து 3-வது ஆண்டாக இம்முறையும் இந்த சேவைகளுக்கு தடை விதிக்கப்படவில்லை.
ஜம்முவில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், துணைநிலை கவர்னரின் ஆலோசகர் ராஜீவ் ராய் பட்நாகர் தேசியக்கொடியை ஏற்றிவைத்தார்.
நல்ல மாற்றத்தை நோக்கி...
அவர் கூறுகையில், அமைதி, நல்லிணக்கம் என்ற புதிய யுகத்தை காஷ்மீர் காணத் தொடங்கியுள்ளது என்றார். அவரது கருத்தையே அரசியல் பார்வையாளர்கள் பலரும் பிரதிபலிக்கின்றனர். பயங்கரவாதத்தின் பிடி வெகுவாகத் தளர்ந்துள்ள நிலையில், நல்லவிதமான மாற்றத்தை நோக்கி காஷ்மீர் பயணிக்கத் தொடங்கியிருப்பது கண்கூடாகத் தெரிகிறது என்று அவர்கள் கூறுகின்றனர்.