நாட்டில் விவசாய கல்வியின் தேவை அதிகரிப்பு; கவர்னர் தாவர்சந்த் கெலாட் பேச்சு
|நாட்டில் விவசாய கல்வியின் தேவை அதிகரித்துள்ளதாக கவர்னர் தாவர்சந்த் கெலாட் கூறியுள்ளார்.
பெங்களூரு:
பெங்களூரு விவசாய பல்கலைக்கழகத்தின் 57-வது பட்டமளிப்பு விழா பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது:-
விவசாயத்துறை நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய அங்கமாக உள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு விவசாயத்துறை முக்கிய பங்காற்றுகிறது. விவசாயிகள் தங்களின் பாரம்பரிய முறையில் விவசாயம் செய்ய வேண்டும். சம்பிரதாய பயிர்களுடன் மூலிகை பயிர்களையும் பயிரிட வேண்டும். இதன் மூலம் விவசாயிகள் தங்களின் வருவாயை பெருக்கிக் கொள்ள வேண்டும்.
விவசாயத்துறையின் வளர்ச்சி மற்றும் விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்ற இந்த விவசாய பல்கலைக்கழகம் பாடுபட்டு வருகிறது. இன்று நாட்டில் விவசாய கல்வியின் தேவை அதிகரித்துள்ளது. இந்த விவசாய கல்வி தனிப்பட்ட முறையில் ஒருவரின் முன்னேற்றத்திற்கு பயன்படுவதுடன் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் பயன்படுகிறது.
விவசாய வளர்ச்சியில் தோட்டக்கலைத்துறைக்கு சிறப்பு இடம் உண்டு. இந்த தோட்டக்கலை பயிர்கள் வணிக ரீதியான வடிவத்தையும் பெறுகிறது. அதனால் விவசாயிகள் அந்த தோட்டக்கலை பயிர் சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். விவசாயிகளின் வருவாயை பெருக்க மத்திய-மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை அமல்படுத்துகின்றன. இதை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
விவசாய அமைப்புகள், விவசாயிகளுடன் தொடர்பில் இருக்க வேண்டும். விவசாய தொழில்நுட்பங்களை விவசாயிகளுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். விவசாயிகளின் பிரச்சினைகளை புரிந்து கொண்டு அவற்றுக்கு தீர்வு காண முயற்சி செய்ய வேண்டும். நாடு சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைந்துள்ளது.
நாட்டின் பொருளாதாரம் பலமாக உள்ளது. பொருளாதார பலத்தில் இந்தியா 5-வது பெரிய நாடாக உள்ளது. வரும் நாட்களில் நமது நாடு 3-வது பொருளாதார பலமிக்க நாடாக மாறும். இதற்கு நாம் அனைவரும் பங்களிப்பு அளிக்க வேண்டும். அடுத்த 25 ஆண்டுகள் அம்ருத காலம். நமது நாட்டை சிறந்த நாடுகளின் பட்டியலில் சேர்க்க நாம் பாடுபட வேண்டும்.
இவ்வாறு தாவர்சந்த் கெலாட் பேசினார்.
விழாவில் விவசாயத்துறை மந்திரி செலுவராயசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.