கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: பெங்களூருவில் பொது இடங்களில் முககவசம் அணிவது கட்டாயம்
|பெங்களூருவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொது இடங்களில் கட்டாயம் முககவசம் அணிவது நேற்று முதல் அமலுக்கு வந்தது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் வைரஸ் பரவல் வேகம் எடுத்து உள்ளது. தினசரி பாதிப்பில் பெங்களூருவில் தான் அதிக பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. இந்த நிலையில் பெங்களூருவில் கொரோனா பரவலை தடுக்க பொது இடங்களில் முககவசம் கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி சிறப்பு கமிஷனர் ஹரீஷ் குமார் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பெங்களூருவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் வணிக வளாகங்கள் உள்பட பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது இன்று (அதாவது நேற்று) கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. பொது இடங்களில் முகக்கவசம் அணிவது குறித்து மார்ஷல்கள் மூலம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்.
பெங்களூருவில் தற்போது தினமும் 16 ஆயிரம் சோதனைகளை நடத்தி வருகிறோம். அதை 20 ஆயிரமாக உயர்த்த முடிவு செய்து உள்ளோம். கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மக்கள் பீதி அடைய வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.