தொடர் கனமழையால் நீர்வரத்து அதிகரிப்பு: துங்கா அணை நிரம்பியது
|தொடர் கனமழையால் நீர்வரத்து அதிகரித்ததால் துங்கா அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பி உள்ளது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 17 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
சிவமொக்கா;
தொடர் கனமழை
கர்நாடகத்தில் மலைநாடு மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் அந்தப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக இடைவிடாமல் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. இதேபோல், மலைநாடு மாவட்டமான சிவமொக்காவிலும் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
இந்த கனமழையால் மாவட்டத்தில் பல இடங்களில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள், அணைகள் நிரம்பி வருகின்றன.
துங்கா அணை நிரம்பியது
தொடர் கனமழை காரணமாக லிங்கனமக்கி, பத்ரா, துங்கா உள்ளிட்ட அணைகளுக்கும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அந்த அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதேபோல், சிவமொக்கா அருகே காஜனூரில் உள்ள துங்கா அணைக்கும் நீர்வரத்து அதிகரித்தது. இந்த நிலையில், நேற்று காலை துங்கா அணை தனது முழு கொள்ளளவையும் எட்டி நிரம்பியது.
கடல் மட்டத்தில் இருந்து 588.24 அடி கொள்ளளவு கொண்ட துங்கா அணையில் நேற்று காலை நிலவரப்படி 588.24 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 17,910 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அந்த தண்ணீர் 4 மதகுகள் வழியாக அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. அதாவது அணையில் இருந்து வினாடிக்கு 17,910 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக துங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சிவமொக்கா நகரில் உள்ள பழைய பாலத்தை தொட்டப்படி தண்ணீர் செல்கிறது. மேலும் துங்கா ஆற்றில் உள்ள மண்டபமும் மூழ்கும் நிலையில் உள்ளது.
விவசாய பணிகள் தொடக்கம்
சிவமொக்காவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் சிவமொக்கா, சாகர், ஒசநகர், தீர்த்தஹள்ளி பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் விவசாய பணிகளை தொடங்கி உள்ளனர்.