மங்களூரு விமான நிலையத்தில் பயணிகள் வருகை அதிகரிப்பு
|மங்களூரு விமான நிலையத்தில் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது என விமான போக்குவரத்து வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
மங்களூரு;
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு பஜ்பே பகுதியில் சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலைத்தில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கும், டெல்லி, சென்னை போன்ற பகுதிகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. கொரோனா காலத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டது.
கொரோனா விதிகள் தளர்வுகளுக்கு பின் பயணிகள் வருகை வேகம் எடுக்க தொடங்கியது. அந்த வகையில் மங்களூரு விமான நிலையத்தில் பயணிகள் வருகை அதிகரிக்க தொடங்கி உள்ளது. கடந்த மே மாதத்தில் மங்களூரு விமான நிலையத்தில் 1.67 லட்சம் பேர் விமான சேவையை பயன்படுத்தி உள்ளனர். இது கொரோனா காலத்துக்கு பின் புதிய உச்சமாகும்.
மே மாதத்தில் மொத்தம் 1,313 விமானங்கள் இயக்கப்பட்டன. மேலும், ஏப்ரல் மாதத்தில் பயணிகள் வருகை 1.46 லட்சமாக இருந்தது. அந்த மாதத்தில் மொத்தம் 1,147 விமானங்கள் செயல்பாட்டில் இருந்தன. பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு கூடுதல் விமான சேவை வழங்க விமான நிலையங்கள் திட்டமிட்டிருப்பதாக விமான போக்குவரத்து வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.