தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு-வினாடிக்கு 4,674 கன அடி நீர் செல்கிறது
|கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து வினாடிக்கு 4,674 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
மண்டியா:-
தமிழகத்திற்கு நீர் திறப்பு
கர்நாடகா-தமிழகம் இடையே பல ஆண்டுகளாக காவிரி நீர் பிரச்சினை நீடித்து வருகிறது. குறிப்பாக போதிய மழை பெய்யாத காலக்கட்டத்தில் இந்த பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்துபோனதால் கர்நாடக அணைகளுக்கு நீர் வரத்து குறைந்துவிட்டது.
இந்தநிலையில் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று காவிரி மேலாண்மை ஆணையம், கர்நாடக அரசுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடவேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி கர்நாடகத்தில் உள்ள கிருஷ்ணசாகர் (கே.ஆர்.எஸ்.), கபினி அணைகளில் இருந்து
தமிழகத்திற்கு நேற்று முன்தினம் முதல் காவிரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 3,834 கனஅடி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டது.
இந்தநிலையில் 2-வது நாளாக நேற்றும் கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
வினாடிக்கு 4,674 கன அடி நீர் திறப்பு
அதாவது மண்டியா மாவட்டம் கண்ணம்பாடியில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கே.ஆர்.எஸ் அணையில் இருந்து நேற்றைய நிலவரப்படி வினாடிக்கு 2,674 கன அடி நீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 6,016 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் 124.80 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் 97.08 அடியாக உள்ளது. இதில் அணையில் இருந்து
வினாடிக்கு 2,674 கன அடி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது.
அதேபோல கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட மைசூரு எச்.டி.கோட்டையில் உள்ள கபினி அணைக்கு நேற்றைய நிலவரப்படி வினாடிக்கு 3,166 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அதே வேளையில் அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி நீர் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்டு உள்ளது. கபினி அணையின் நீர்மட்டம் 2,275.97 அடியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
தமிழகத்திற்கு காவிரியில் 2 அணைகளில் இருந்தும் நேற்று வினாடிக்கு 4,674 கன அடி நீர் திறந்துவிடப்பட்டது. அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு நேற்று முன்தினம் 3,834 கனஅடியாக இருந்த நிலையில் நேற்று நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.