கே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: தொடர் கனமழையால் ஓரிரு நாட்களில் நிரம்ப வாய்ப்பு
|கே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடர் கனமழையால் ஓரிரு நாட்களில் நிரம்ப வாய்ப்புள்ளது.
மைசூரு: கர்நாடகத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அணைகள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது. இதேபோல், மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணாம்பாடி கிராமத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணைக்கும், மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளியில் உள்ள கபினி அணைக்கும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 124.80 அடி உயரம் கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் நேற்று மாலை நிலவரப்படி 120.46 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 38,858 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 4,070 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணை நிரம்ப இன்னும் 4 அடியே பாக்கி உள்ளதால், ஓரிரு நாட்களில் கே.ஆர்.எஸ். அணை நிரம்பி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல், கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையில் நேற்று மாலை நிலவரப்படி 2,280 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 17,353 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கபினி அணை நிரம்பவும் 4 அடி மட்டுமே பாக்கி உள்ளதால், இன்னும் சில தினங்களில் அணை நிரம்பி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணைகளில் இருந்தும் 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் தமிழகத்துக்கு செல்கிறது.