நிலங்கள், கட்டிடங்களை விற்று ரூ.60 ஆயிரம் கோடி நிதி திரட்ட திட்டமா? எல்.ஐ.சி. மறுப்பு
|எல்.சி.ஐ. நிறுவனம் கடந்த நிதியாண்டின் இறுதியில் முதலீட்டாளர்களுக்கு ஒரு பங்கிற்கு ரூ.6 வீதம் இடைக்கால ஈவுத்தொகையை அறிவித்தது.
புதுடெல்லி:
நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., தனது நிலங்கள் மற்றும் வணிக கட்டிடங்களை விற்பதன் மூலம் 60 ஆயிரம் கோடி ரூபாய் வரை நிதி திரட்ட திட்டமிட்டிருப்பதாக பரபரப்பு தகவல் வெளியானது.
குறிப்பாக, டெல்லியின் கனாட் பிளேஸில் உள்ள ஜீவன் பார்தி கட்டிடம், கொல்கத்தா சித்தரஞ்சன் அவென்யூவில் உள்ள எல்.ஐ.சி. கட்டிடம் மற்றும் மும்பையில் உள்ள ஆசியாடிக் சொசைட்டி மற்றும் அக்பரல்லியின் கட்டிடங்கள் உள்ளிட்ட சொத்துக்களை விற்க திட்டமிட்டுள்ளதாக அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டது. சில குறிப்பிட்ட ஊடகங்களிலும் இது செய்தியாக வெளியிடப்பட்டது. இந்த தகவல் இணையதளத்தில் வேகமாக பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால், இந்த தகவலை எல்.ஐ.சி. மறுத்துள்ளது. அப்படி ஒரு திட்டம் எதுவும் தங்களிடம் இல்லை என்றும், இதுபற்றி பிரதான ஊடகங்களில் வெளியான செய்திகள் தவறானவை என்றும் எல்.ஐ.சி. கூறி உள்ளது.
2023-24 நிதியாண்டின் இறுதி காலாண்டில் எல்.ஐ.சி.யின் சொத்து மதிப்பு உயர்ந்தது. நிகர லாபம் அதிகரித்ததால் முதலீட்டாளர்களுக்கு ஒரு பங்கிற்கு ரூ.6 வீதம் இடைக்கால ஈவுத்தொகையை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.