< Back
தேசிய செய்திகள்
வரிஏய்ப்பு புகார்: சமூக வலைத்தள பிரபலங்கள், யூ டியூபர்கள் மீது வருமானவரி விசாரணை
தேசிய செய்திகள்

வரிஏய்ப்பு புகார்: சமூக வலைத்தள பிரபலங்கள், யூ டியூபர்கள் மீது வருமானவரி விசாரணை

தினத்தந்தி
|
30 Jun 2023 3:56 AM IST

வரிஏய்ப்பில் ஈடுபட்டதாக சமூக வலைத்தள பிரபலங்கள் மற்றும் யூ டியூப் பிரபலங்களுக்கு எதிராக வருமானவரித்துறை விசாரணையை தொடங்கி உள்ளது.

புதுடெல்லி,

சமூக வலைத்தள பிரபலங்கள் மற்றும் யூ டியூப், இன்ஸ்டாகிராமில் படைப்புகளை உருவாக்கி வெளியிடுபவர்கள் ஆகியோர் கணிசமாக சம்பாதிப்பதாகவும், ஆனால் அந்த வருமானத்தை வருமான கணக்கில் காண்பிக்காமலோ அல்லது குறைத்து காண்பித்தோ வரிஏய்ப்பில் ஈடுபட்டு வருவதாகவும் வருமானவரித்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, அத்தகைய பிரபலங்களுக்கு எதிராக வருமானவரித்துறை விசாரணையை தொடங்கி இருக்கிறது.

கணிசமான வருவாய்

இதுகுறித்து வருமானவரித்துறை வட்டாரங்கள் கூறியதாவது:-

யூ டியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில், சில பிரபலங்கள் தங்கள் படைப்புகள் மூலம் கணிசமாக சம்பாதிக்கிறார்கள். வர்த்தக பொருட்களுக்கு ஆதரவாக விளம்பரம் செய்வதன் மூலமும் வருவாய் ஈட்டுகிறார்கள். ஆனால் இவற்றை வருமானவரி கணக்கில் காட்டுவது இல்லை.

வர்த்தகம் மற்றும் தொழில் மூலம் ரூ.20 ஆயிரத்துக்கு மேல், வருமானம் ஈட்டினால், வரி செலுத்த வேண்டும் என்று கடந்த ஆண்டு பட்ஜெட்டில் புதிய விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே, அந்த பிரபலங்களுக்கு எதிராக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

கேரளாவில் சோதனை

முதல்கட்டமாக, கேரளாவில், 10 யூ டியூப் மற்றும் சமூக வலைத்தள பிரபலங்களின் வீடுகளில் கடந்த வாரம் சோதனை நடத்தப்பட்டது. அவர்கள் நாகரிகமாக நடத்தப்பட்டனர். அவர்களின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. இவர்களில் நடிகர்களும் அடங்குவர். இதுபோல், நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ள பிரபலங்களும் விசாரணை வளையத்தில் கொண்டுவரப்பட்டுள்ளனர். முதலில் நோட்டீஸ் அனுப்பி, முறையாக விசாரணை நடக்கிறது.

மேலும், சில முன்னணி பிரபலங்களின் சமூக வலைத்தள செயல்பாடுகளை வருமானவரித்துறை கண்காணித்து வருகிறது.

இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் செய்திகள்