< Back
தேசிய செய்திகள்
2022-23ல் தேசிய கட்சிகளின் வருமானம் ரூ.3,077 கோடி - அதிக வருமானத்துடன் பா.ஜ.க. முதலிடம்
தேசிய செய்திகள்

2022-23ல் தேசிய கட்சிகளின் வருமானம் ரூ.3,077 கோடி - அதிக வருமானத்துடன் பா.ஜ.க. முதலிடம்

தினத்தந்தி
|
28 Feb 2024 7:16 PM IST

2022-23ல் பா.ஜ.க.வின் வருமானம் ரூ.2,361 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் உள்ள 6 தேசிய கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த 2022-23ம் ஆண்டுக்கான வரவு மற்றும் செலவு குறித்த தகவல்களை சேகரித்து ஜனநாயக சீர்திருத்த சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி 2022-23ல் தேசிய கட்சிகளின் மொத்த வருமானம் ரூ.3,077 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பா.ஜ.க. 76.73% பங்கு வருமானத்தைப் பெற்று முதலிடத்தில் உள்ளது. 2022-23ல் பா.ஜ.க.வின் வருமானம் ரூ.2,361 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து காங்கிரஸ் கட்சி ரூ.452.375 கோடி(14.70%) வருமானத்துடன் 2-வது இடத்தில் உள்ளது.

இதைத் தவிர பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி கட்சி, தேசிய மக்கள் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய 4 தேசிய கட்சிகள் தங்கள் வருமான விவரத்தை தாக்கல் செய்துள்ளன. இதில் ஆம் ஆத்மியின் வருமானம் ரூ.85.17 கோடி, தேசிய மக்கள் கட்சியின் வருமானம் ரூ.7.56 கோடி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வருமானம் ரூ.141.66 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021-22 மற்றும் 2022-23ம் நிதி ஆண்டுக்கு இடையில் பா.ஜ.க.வின் வருமானம் 23.15% அதிகரித்துள்ளது. முன்னதாக 2021-22ம் நிதி ஆண்டில் பா.ஜ.க.வின் வருமானம் ரூ.1917.12 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்