அரியானாவை தொடர்ந்து ஜார்க்கண்டில் சம்பவம்; வாகனம் ஏற்றி பெண் காவல் துணை ஆய்வாளர் படுகொலை
|அரியானாவை தொடர்ந்து ஜார்க்கண்டில் வாகன சோதனையில் ஈடுபட்ட பெண் காவல் துணை ஆய்வாளரை உள்நோக்கத்துடன் நபர் ஒருவர் வாகனம் ஏற்றி படுகொலை செய்து உள்ளார்.
ராஞ்சி,
ஜார்க்கண்டில் துபுதனா பகுதியில் பெண் காவல் துணை ஆய்வாளர் சந்தியா தொப்னோ என்பவர் தலைமையில் நேற்றிரவு வாகன சோதனை நடந்து வந்துள்ளது. இதில், கால்நடைகளை ஏற்றி கொண்டு வாகனம் வருகிறது என சந்தியாவுக்கு தகவல் கிடைத்து உள்ளது.
இதனை தொடர்ந்து, குறிப்பிட்ட வாகனம் வந்தபோது, அதனை சந்தியா நிறுத்த முயன்றுள்ளார். ஆனால், அந்த வாகனத்தின் ஓட்டுனர் வேண்டுமென்றே அவர் மீது ஏற்றி விட்டு தப்பியுள்ளார்.
இதில், படுகாயமடைந்து மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பெண் காவல் துணை ஆய்வாளர் உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
இந்த சம்பவத்தில் வாகன ஓட்டுனரை போலீசார் கைது செய்துள்ளனர் என மூத்த போலீஸ் சூப்பிரெண்டு கவுஷல் கிஷோர் இன்று காலை கூறியுள்ளார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
அரியானாவில் நூ மாவட்டத்தில் மற்றொரு சம்பவத்தில், சட்டவிரோத வகையில் நடந்து வந்த சுரங்க பணிகளை நேற்று விசாரிக்க சென்ற துணை போலீஸ் சூப்பிரெண்டு சுரேந்திர சிங் பிஷ்னோய் என்பவர் வாகனம் ஏற்றி கொல்லப்பட்டார்.