அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா; இந்தியாவின் கலாச்சாரம், ஆன்மீகத்தின் மறுமலர்ச்சி நாள் - ஜே.பி.நட்டா
|ராமர் கோவில் திறப்பு விழா பல ஆயிரம் ஆண்டுகளுக்கு மறக்க முடியாத நாளாக இருக்கும் என ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
அயோத்தி ராமர் கோவில் கட்டுமானம் மற்றும் திறப்பு விழா தொடர்பாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று பா.ஜ.க. தேசிய தலைவரான ஜே.பி.நட்டா எம்.பி. பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"அயோத்தி ராமர் கோவிலுக்கான 500 ஆண்டுகால போராட்டத்தில் அடக்குமுறையும், அடிமைத்தனமும் நிறைந்துள்ளது. ஆனால் 2024 ஜனவரி 22-ந்தேதி நமது நாட்டின் ஆன்மீக மற்றும் கலாச்சாரத்திற்கான மறுமலர்ச்சியின் நாளாகும். இந்த நாள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு மறக்க முடியாததாக இருக்கும்.
பகவான் ராம் லல்லாவின் பிரான பிரதிஷ்டையை காணும் வாய்ப்பு நமக்கு கிடைத்தது நமது அதிர்ஷ்டமாகும். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க காலத்தின் ஒரு பகுதியாக நாம் மாறிவிட்டோம். கடவுளின் ஆசீர்வாதம் இல்லாமல் இது சாத்தியமில்லை.
இது 1528 முதல் 2023 வரை 500 ஆண்டுகள் நீடித்த போராட்டம். இவ்வளவு தலைமுறைகள் கடந்துவிட்டன. இவ்வளவு காலம் கடந்துவிட்டது. ராமரின் வனவாசம் 14 ஆண்டுகள் என்று நாம் கூறுகிறோம், ஆனால் ராமர் கோவிலுக்கான வனவாசமும் 500 ஆண்டுகள் நீடித்தது.
ராமர் இந்த நாட்டின் ஆன்மா. அவரை கடவுளாக வழிபடுவது மட்டுமின்றி, நமது தனிப்பட்ட மற்றும் சமூக வாழ்க்கையிலும் அவரால் ஈர்க்கப்படுகிறோம். சனாதன தர்மம் மட்டுமின்றி மற்ற மதங்கள், மத நூல்கள் மற்றும் பிற நாடுகளிலும் ஸ்ரீ ராமர் காணப்படுகிறார். எனவே ராமரை குறுகிய கண்ணோட்டத்தில் பார்க்க முடியாது.
இந்த 500 ஆண்டுகாலப் போராட்டத்தில் பல மன்னர்கள், மக்கள், மகான்கள் ராமர் கோவிலுக்காக போராடியுள்ளனர். அவர்கள் அனைவரையும் கவுரவிக்க விரும்புகிறேன்."
இவ்வாறு ஜே.பி.நட்டா தெரிவித்தார்.