< Back
தேசிய செய்திகள்
விராஜ்பேட்டையில்  விளைநிலங்களில் புகுந்து 9 காட்டு யானைகள் அட்டகாசம்
தேசிய செய்திகள்

விராஜ்பேட்டையில் விளைநிலங்களில் புகுந்து 9 காட்டு யானைகள் அட்டகாசம்

தினத்தந்தி
|
29 July 2023 12:15 AM IST

விராஜ்பேட்ைட தாலுகாவில் விளைநிலங்களில் புகுந்து 9 காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன. அந்த யானைகளை வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விரட்டியடித்தனர்.

குடகு-

விராஜ்பேட்ைட தாலுகாவில் விளைநிலங்களில் புகுந்து 9 காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன. அந்த யானைகளை வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விரட்டியடித்தனர்.

காட்டு யானைகள் அட்டகாசம்

குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா சித்தாப்புரா அருகே குய்யா கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் வெளியேறி தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் விவசாயிகள், பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 9 காட்டு யானைகள், குய்யா பகுதியில் உள்ள காபி தோட்டங்களில் புகுந்து பயிர்களை மிதித்து நாசப்படுத்தி அட்டகாசம் செய்தன.

இதனால் அதிர்ச்சி அடைந்த காபி தோட்ட தொழிலாளர்கள் இதுபற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விராஜ்பேட்டை வனத்துறை அதிகாரி தேவய்யா தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் அவர்கள், காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க நடவடிக்கை எடுத்தனர்.

வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

கடும் மழையையும் பொருட்படுத்தாமல் அவர்கள் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது காட்டு யானைகள் பிரிந்து சென்றதால் அவற்றை விரட்டியடிப்பதில் தாமதம் ஏற்பட்டது. உடனே சுதாரித்து கொண்ட வனத்துறையினர், 9 யானைகளையும் ஒன்று சேர்த்து வனப்பகுதிக்குள் விரட்டினர். அந்த யானைகள் விராஜ்பேட்டை-சித்தாப்புரா சாலையை கடந்து வனப்பகுதிக்குள் சென்றன.

காட்டு யானைகள் சென்றதால் அந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டது. இதனை காண அந்தப்பகுதியில் ஏராளமான மக்கள் திரண்டனர்.

கிராம மக்கள் கோரிக்கை

இதையடுத்து அந்தப்பகுதி மக்கள், காட்டு யானைகள் வெளியேறுவதை தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர். கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று காட்டு யானைகள் விளைநிலங்களில் நுழையாமல் தடுக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

மேலும் செய்திகள்