< Back
தேசிய செய்திகள்
உன்சூரில் அட்டகாசம் செய்து வந்த  சிறுத்தை கூண்டில் சிக்கியது
தேசிய செய்திகள்

உன்சூரில் அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது

தினத்தந்தி
|
21 July 2023 12:15 AM IST

உன்சூரில் அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மைசூரு-

உன்சூரில் அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர் அட்டகாசம்

மைசூரு மாவட்டம் உன்சூர் தாலுகா மனூனஹள்ளி கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து, கடந்த ஒரு மாதமாக சிறுத்தை ஒன்று வெளியேறி தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது.

அதாவது அந்த சிறுத்தை, ஆடு, மாடுகளை வேட்டையாடி வந்தது. அந்தப்பகுதியில் சிறுத்தை நடமாடி வந்ததை பலர் பார்த்து உள்ளனர். இதனால் அந்தப்பகுதி மக்கள் பீதியில் இருந்து வந்தனர். மேலும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று கிராம மக்கள் உன்சூர் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

சிறுத்தை கூண்டில் சிக்கியது

இந்த நிலையில் மக்களின் வேண்டுகோளை ஏற்று கடந்த 3 நாட்களுக்கு முன்பு குமார நாயக்என்பவரது விவசாய நிலத்தில் வனத்துறையினர் இரும்பு கூண்டு ஒன்றை வைத்தனர். மேலும் கூண்டில் சிறுத்தையை பிடிக்க இறைச்சியை வைத்து இருந்தனர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் அதிகாலை, கூண்டில் இருந்த இரையை சாப்பிட வந்தபோது, அந்த சிறுத்தை வசமாக கூண்டுக்குள் சிக்கிக் கொண்டது.

இதுபற்றி அறிந்ததும் அந்தப்பகுதி மக்கள் உன்சூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்போில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் வனத்துறையினர், கூண்டுடன் சிறுத்தையை லாரியில் ஏற்றி கொண்டு நாகரஒலே வனப்பகுதியில் விட்டனர்.

பொதுமக்கள் மகிழ்ச்சி

உன்சூர் பகுதியில் தொடர் அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை, கூண்டில் சிக்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கூண்டில் சிக்கியது 4 வயது பெண் சிறுத்தை என வனத்துறை அதிகாரி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்