உடுப்பியில் தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ. 52 லட்சம் மோசடி
|பகுதி நேர வேலை தருவதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ. 52 லட்சத்தை மர்மநபர் மோசடி செய்துள்ளார்.
உடுப்பி-
பகுதி நேர வேலை தருவதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ. 52 லட்சத்தை மர்மநபர் மோசடி செய்துள்ளார்.
தனியார் நிறுவன ஊழியர்
உடுப்பி டவுன் பகுதியை சேர்ந்தவர் ராகவேந்திரா. இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்தநிலையில், வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலம் பகுதி நேர வேலை பார்க்க ராகவேந்திரா முடிவு செய்தார். அதன்படி, அவர் ஆன்லைனில் பகுதி நேர வேலை தேடி வந்தார். இந்தநிலையில் ராகவேந்திரா வாட்ஸ்-அப் எண்ணிற்கு குறுந்தகவல் ஒன்று வந்தது. அதில், வீட்டில் இருந்தே பகுதி நேர வேலை செய்யலாம் என இருந்தது. இதையடுத்து அதில் இருந்த லிங்கில் ராகவேந்திரா சென்றார்.
அதில் சில விவரங்கள் கேட்கப்பட்டது. இதையடுத்து அதில் கேட்கப்பட்ட அனைத்து விவரங்களையும் அவர் விண்ணப்பித்தார். இந்தநிலையில், ராகவேந்திரா எண்ணிற்கு மர்மநபர் ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார். அதில், வீட்டில் இருந்தே பகுதி நேர வேலை செய்யலாம். அதற்கு முன்பணம் செலுத்த வேண்டும் என கூறினார்.
வங்கி கணக்கிற்கு
இதனை நம்பிய ராகவேந்திரா அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு பல்வேறு தவணைகளாக ரூ. 52 லட்சத்து 13 ஆயிரத்து 359 அனுப்பினார். கடந்த சில நாட்கள் ஆகியும் ராகவேந்திராவுக்கு மர்மநபர் வேலை கொடுக்கவில்லை. இதனால் அவர் சந்தேகம் அடைந்தார். இதையடுத்து மர்மநபரை ராகவேந்திரா தொடர்பு கொண்டார். அப்போது அவரது செல்போன் எண் சுவிட்ச்- ஆப் என வந்தது.
இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை ராகவேந்திரா உணர்ந்தார். இதுகுறித்து உடுப்பி குற்றப்பிரிவு போலீசில் ராகவேந்திரா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் செல்போன் எண்ணை வைத்து மர்மநபரையும் தேடி வருகிறார்கள்.