< Back
தேசிய செய்திகள்
நள்ளிரவில் குப்பை கழிவுகளை வீச சென்ற இளம்பெண்ணை கொடூரமாக தாக்கி பாலியல் அத்துமீறல்
தேசிய செய்திகள்

நள்ளிரவில் குப்பை கழிவுகளை வீச சென்ற இளம்பெண்ணை கொடூரமாக தாக்கி பாலியல் அத்துமீறல்

தினத்தந்தி
|
25 Feb 2024 4:25 AM IST

இளம்பெண்ணை 4 சிறுவர்களும் கொடூரமாக தாக்கினர்.

ஆடுகோடி,

கர்நாடக மாநிலம் பெங்களூரு ஆடுகோடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு இளம்பெண் வசித்து வருகிறார். கடந்த 18-ந் தேதி அன்று நள்ளிரவில் அந்த இளம்பெண் தனது வீட்டில் இருந்த குப்பை கழிவுகளை சேகரித்துக் கொண்டு அதை வீச, குப்பை தொட்டி வைக்கப்பட்ட இடத்தை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் அங்குள்ள ஒரு ஆட்டோ நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது 4 பேர் ஒரு ஆட்டோவில் அங்கு வந்தனர். அவர்கள் 4 பேரும் 18 வயது நிரம்பாத சிறுவர்கள் ஆவர்.

அவர்கள் அந்த இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் கூச்சலிட்டார். அப்போது அந்த இளம்பெண்ணை அந்த 4 சிறுவர்களும் சேர்ந்து தாக்கினர். இதனால் அவர்களை அந்த இளம்பெண் எச்சரித்தார். அப்போது அந்த இளம்பெண்ணை 4 சிறுவர்களும் கொடூரமாக தாக்கினர்.

இந்த சந்தர்ப்பத்தில் அந்த இளம்பெண், அதே பகுதியில் வசித்து வரும் தனது தோழியை உதவிக்கு அழைத்தார். அதன்பேரில் அந்த இளம்பெண்ணின் தோழி அங்கு வந்தார். அவர் அந்த சிறுவர்களிடம் தட்டிக்கேட்டார். மேலும் அந்த இளம்பெண்ணை மீட்க முயன்றார். அப்போது அந்த 4 சிறுவர்களும், அந்த பெண் மீதும் தாக்குதல் நடத்தினர். இதில் அந்த 2 பெண்களும் பலத்த காயம் அடைந்தனர்.

பின்னர் அந்த சிறுவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து அந்த இளம்பெண்கள் வீடு திரும்பினர். அவர்களின் நிலையைக் கண்டு அவர்களுடைய குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் அவர்கள் 2 பேரையும் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இச்சம்பவம் குறித்த தகவல் தற்போது தான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து ஆடுகோடி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 4 சிறுவர்களையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்