செல்பி புகைப்படம் ஆர்வத்தில்... 100 அடி ஆழ பள்ளத்தில் விழுந்த இளம்பெண்
|மராட்டியத்தில் ஆன்வி காம்தர் (வயது 26) என்ற இன்ஸ்டாகிராம் பிரபலம் கும்பே நீர்வீழ்ச்சி அருகே, வீடியோ எடுத்தபோது, பள்ளத்திற்குள் தவறி விழுந்ததில் உயிரிழந்து விட்டார்.
புனே,
மராட்டியத்தின் புனே மாவட்டத்தில் இருந்து 29 வயது பெண் ஒருவர் தன்னுடைய தோழிகளுடன் சதாரா மாவட்டத்தில் உள்ள போர்ன் காட் பகுதிக்கு சுற்றுலா வந்துள்ளார். அவர் தோஸ்கார் நீர்வீழ்ச்சி அருகே இயற்கை அழகை கண்டுகளித்தபடி இருந்துள்ளார்.
அப்போது, செல்பி புகைப்படம் ஒன்றை எடுக்க அவர் விரும்பியுள்ளார். அதற்காக தயாரானபோது, பின்னால் இருந்த 100 அடி ஆழ பள்ளத்தில் தவறி விழுந்து விட்டார். இதில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இந்த சம்பவம் பற்றி அறிந்ததும், ஊர்க்காவல் படையை சேர்ந்த வீரர்கள் மற்றும் சக மலையேற்ற வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதுபற்றிய வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது.
இதன்பின் அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அவருடைய நிலைமை சீராக உள்ளது என போலீசார் தெரிவித்தனர். இதுபோன்ற சம்பவங்களில் சிக்கியவர்கள் பலியாகி விடுவதுண்டு. ஆனால் இந்த பெண் சுயநினைவுடன் இருந்துள்ளார். துணிச்சலுடன் கீழே இருந்தபடி உதவி கேட்டு சத்தம் போட்டுள்ளார்.
இதனால், 100 அடி ஆழத்தில் அவர் இருக்கும் இடம் தெரிந்து சரியாக மீட்பு குழுவினர் சென்றடைந்தனர். அவரை மீட்டு, மேலே கொண்டு வந்து உள்ளனர்.
சமீபத்தில், மராட்டியத்தின் ராய்காட் மாவட்டத்தில் ஆன்வி காம்தர் (வயது 26) என்ற இன்ஸ்டாகிராம் பிரபலம் கும்பே நீர்வீழ்ச்சிக்கு 7 நண்பர்களுடன் சென்றுள்ளார்.
நண்பர்களுடன் சேர்ந்து அவர், வீடியோ ஒன்றை எடுத்து கொண்டிருக்கும்போது, பள்ளத்திற்குள் தவறி விழுந்து விட்டார். இந்த சம்பவத்தில் அவர் உயிரிழந்து விட்டார். இதனை தொடர்ந்து சுற்றுலா செல்லும் ஒவ்வொருவரும் பொறுப்புடன் நடந்து கொள்ளும்படியும், பாதுகாப்பாக இருக்கும்படியும் அதிகாரிகள் கேட்டு கொண்டனர். எனினும், நண்பர்களுடன் சுற்றுலா செல்லும் ஆர்வத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன.