< Back
தேசிய செய்திகள்
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம் - இமாச்சல பிரதேச முதல்-மந்திரி
தேசிய செய்திகள்

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம் - இமாச்சல பிரதேச முதல்-மந்திரி

தினத்தந்தி
|
12 Dec 2022 4:15 PM IST

முதல் அமைச்சரவையில் வாக்குறுதி அளித்தப்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவோம் என இமாச்சல பிரதேச முதல்-மந்திரி சுக்விந்தர் சிங் கூறினார்.

சிம்லா,

இயற்கை எழில் கொஞ்சும் இமாசலபிரதேச மாநிலத்தில் கடந்த மாதம் 12-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது.

இங்கு 1985-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு தேர்தலிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்த முறையும் அந்த சரித்திரம் தொடருமா அல்லது மாறுமா என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 8-ந் தேதி எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் பெரும்பாலான தொகுதிகளில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களே முன்னிலை பெறத் தொடங்கினர்.

இறுதியில் காங்கிரஸ் கட்சி மொத்தம் உள்ள 68 இடங்களில் 40 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. ஆளும் கட்சியாக இருந்த பா.ஜ.க. 25 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

இதனையடுத்து இமாசலபிரதேச மாநிலத்தின் 15-வது முதல்-மந்திரியாக சுக்விந்தர் சிங் சுக்கு பதவியேற்றார்.

அவருக்கு கவர்னர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேக்கர் பதவிப்பிரமாணமும், ரகசியக்காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

துணை முதல்-மந்திரியாக முகேஷ் அக்னிகோத்ரி பதவியேற்றுக்கொண்டார். மந்திரிகள் அடுத்த சில நாட்களில் பதவி ஏற்பார்கள் என தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்று சுக்விந்தா் சிங் சுக்கு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது,

நாங்கள் 10 உத்தரவாதங்களை வழங்கியுள்ளோம், அவற்றை நாங்கள் செயல்படுத்துவோம். நாங்கள் வெளிப்படையான மற்றும் நேர்மையான ஆட்சியை வழங்குவோம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்