மனைவியை கொல்ல முயன்ற வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை
|மனைவியை கொல்ல முயன்ற வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிக்கமகளூரு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
சிக்கமகளூரு-
மனைவியை கொல்ல முயன்ற வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிக்கமகளூரு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
தொழிலாளி
சிக்கமகளூரு (மாவட்டம்) தாலுகா சிந்திகெரே கிராமத்தை சேர்ந்தவர் ரவி (வயது40). தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி. இவர்களது திருமணம் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. இந்தநிலையில் ரவிக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் தினமும் இரவு மதுகுடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். மேலும் லட்சுமிக்கும் அதேப்பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருப்பதாக கூறி ரவி தகராறு செய்தார்.
இதனால் அவர்கள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த 2016-ம் ஆண்டு ரவிக்கும் அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ரவி லட்சுமியை சரமாரியாக தாக்கினார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து லட்சுமி சிக்கமகளூரு புறநகர் போலீசில் புகார் அளித்தார். இந்தநிலையில் வீட்டிற்கு வந்த லட்சுமியிடம் ரவி மீண்டும் தகராறு செய்துள்ளார்.
5 ஆண்டு சிறை
அப்போது ரவி வீட்டில் இருந்த அரிவாளால் லட்சுமியை வெட்டியுள்ளார். இதில் உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிக்கமகளூரு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து சிக்கமகளூரு புறநகர் போலீசார் மனைவியை கொலை செய்ய முயன்ற ரவியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இதுதொடர்பான வழக்கு சிக்கமகளூரு கோர்ட்டில் நடந்து வந்தது. சிக்கமகளூரு புறநகர் போலீசார் கோர்ட்டில் குற்றபத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கின் விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து நீதிபதி சுபா கவுடா நேற்று தீர்ப்பு கூறினார். அதில் மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ற ரவிக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.