மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை
|மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து மங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மங்களூரு;
மகளுக்கு பாலியல் தொல்லை
தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வாலை சேர்ந்தவர் இஸ்மாயில் (வயது 47). கூலி தொழிலாளி. இவரது மகளான மைனர்பெண் அந்தப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். இந்த நிலையில், மைனர் பெண்ணான தனது மகளுக்கு இஸ்மாயில் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து மைனர்பெண் தனது தாயிடம் கூறி கதறி அழுதுள்ளார்.
இதுதொடர்பாக மைனர்பெண்ணின் தாய், பண்ட்வால் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து இஸ்மாயிலை கைது செய்தனர். மேலும் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
10 ஆண்டு சிறை
இதுதொடர்பான வழக்கு மங்களூரு கூடுதல் அமர்வு மற்றும் போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் போலீசார் கோர்ட்டில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று முன்தினம் நீதிபதி கே.எம்.ராதாகிருஷ்ணா தீர்ப்பு வழங்கினார்.
இஸ்மாயில் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் ஒரு மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.