மூதாட்டியை தாக்கிய வழக்கில் தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை
|மூதாட்டியை தாக்கிய வழக்கில் தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.
சிவமொக்கா-
சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா ஜன்னரா பகுதியை சேர்ந்தவர் கவுரம்மா (வயது60). இந்தநிலையில் கடந்த 2015-ம் ஆண்டு இவரது வீட்டிற்கு மர்மநபர் ஒருவர் வந்தார். அவர் மூதாட்டியிடம் தண்ணீர் வேண்டும் என கூறினார். கவுரம்மா வீட்டிற்குள் தண்ணீர் எடுக்க சென்றார். அப்போது மூதாட்டியை அந்தநபர் தாக்கினார்.
பின்னர் வீட்டில் இருந்த பணம் மற்றும் பொருட்களை திருடிவிட்டு சென்றார். இதில் காயமடைந்த கவுரம்மாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.இதுகுறித்து கவுரம்மா பத்ராவதி நியூடவுன் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பெண்ணை தாக்கியது பழைய சங்கிலிபுரா கிராமத்தை சேர்ந்த தொழிலாளி குமார் (வயது 48). என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் குமார் ஜாமீனில் வெளியே வந்தார். இதுதொடர்பான வழக்கு பத்ராவதி கோர்ட்டில் நடந்து வந்தது. பத்ராவதி நியூடவுன் போலீசார் கோர்ட்டில் குற்றபத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து நீதிபதி முகமது அலி நாயக் நேற்றுமுன்தினம் தீர்ப்பு கூறினார். பெண்ணை தாக்கிய வழக்கில் குமாருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.