போலீஸ்காரர்களை தாக்கிய வழக்கில் வாலிபருக்கு 5 ஆண்டு சிறை
|சிவமொக்காவில் போலீஸ்காரர்களை தாக்கிய வழக்கில் வாலிபருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து, சிவமொக்கா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
சிவமொக்கா-
சிவமொக்காவில் போலீஸ்காரர்களை தாக்கிய வழக்கில் வாலிபருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து, சிவமொக்கா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
கடத்தல்
சிவமொக்கா (மாவட்டம்) டவுன் ஆல்கொளா பகுதியை சோ்ந்தவர் ஹபீத். இவர் அப்பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வருகிறார். இந்த நிலையில் ஹபீத்திற்கும் திப்புநகரை சேர்ந்த ஆசிப் அலி (வயது 28) என்பவருக்கும் இடையே தொழில் போட்டியில் முன்விரோதம் இருந்துள்ளது. இந்தநிலையில் கடந்த 2018-ம் ஆண்டு ஆசிப் அலி தனது நண்பர்களுடன் சேர்ந்து ஹபீத்தை துப்பாக்கியை காட்டி மிரட்டி, காரில் கடத்தி சென்று, ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து தாக்கி உள்ளனர். பின்னர் அவரை வினோபாநகர் பகுதியில் காரில் இருந்து அவர்கள் கீழே தள்ளி விட்டு சென்றனர். இதில் காயம் அடைந்த ஹபீத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து ஹபீத் துங்காநகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த ேபாலீசார் தலைமறைவான ஆசிப்பை தேடி வந்தனர்.
கொலை முயற்சி
இந்தநிலையில் ஆசிப்பை துங்கா நகர் போலீசார் பெங்களூருவில் கைது செய்தனர். பின்னர் அவரை பெங்களூருவில் இருந்து துங்காநகருக்கு காரில் போலீசார் அழைத்து வந்தனர். ஒன்னாளி சாலையில் ஹோளலூர் கிராமம் அருகே வந்தபோது ஆசிப் சிறுநீர் கழிக்க வேண்டும் என போலீசாரிடன் கூறினார். இதையடுத்து போலீசார் சாலையோரம் காரை நிறுத்தினர். அப்போது அங்கு கிடந்த இரும்பு கம்பியை ஆசிப் எடுத்து திடீரென போலீஸ்காரர்களை தாக்கிவிட்டு தப்பியோடினார். அவரை போலீசார் துரத்தி சென்று பிடித்தனர். இதுகுறித்து போலீசார் கொலை முயற்சி என ஆசிப் மீது வழக்குப்பதிவு செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சிறைத்தண்டனை
இதுதொடர்பான வழக்கு சிவமொக்கா கோர்ட்டில் நடந்து வந்தது. துங்கா நகர் போலீசார் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கின் விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து நீதிபதி நேற்று முன்தினம் தீர்ப்பளித்தாா். அதில் போலீஸ்காரர்களை தாக்கிய வழக்கில் ஆசிப்பிற்கு 5 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.