< Back
தேசிய செய்திகள்
2024-25 பட்ஜெட்டில் பாதுகாப்புத்துறைக்கு ரூ.6.21 லட்சம் கோடி ஒதுக்கீடு

Image Courtesy : ANI

தேசிய செய்திகள்

2024-25 பட்ஜெட்டில் பாதுகாப்புத்துறைக்கு ரூ.6.21 லட்சம் கோடி ஒதுக்கீடு

தினத்தந்தி
|
1 Feb 2024 5:44 PM IST

கடந்த நிதி ஆண்டை விட நடப்பு நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டில் பாதுகாப்புத்துறைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

2024-2025ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது மத்திய அரசின் பல்வேறு சாதனைகள் மற்றும் செயல்பாடுகளை பட்டியலிட்ட அவர், புதிய திட்டங்களையும் அறிவித்தார்.

இதன்படி மத்திய பாதுகாப்புத்துறைக்கு ரூ.6.21 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். கடந்த நிதி ஆண்டில் ரூ.5.94 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு பாதுகாப்புத்துறைக்கான நிதி அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த இடைக்கால மத்திய பட்ஜெட்டில், பாதுகாப்பு படைகளுக்கான புதிய ஆயுதங்கள், விமானங்கள், போர்க்கப்பல்கள் மற்றும் இதர ராணுவ தளவாடங்களை வாங்குவதற்கான மூலதனச் செலவினங்களுக்காக மொத்தம் ரூ.1.72 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுவே கடந்த நிதி ஆண்டில் 1.62 லட்சம் கோடியாக இருந்தது.

அதேபோல் விமானம் மற்றும் ஏரோ என்ஜின்களுக்கு ரூ.40,777 கோடியும், மற்ற பாதுகாப்பு உபகரணங்களுக்கு ரூ.62,343 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. கடற்படை போர்க்கப்பல்களுக்கு ரூ.23,800 கோடியும், கடற்படை கப்பல்துறை திட்டங்களுக்கு ரூ.6,830 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மொத்த வருவாய் செலவினம் ரூ.4,39,300 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இதில் பாதுகாப்பு ஓய்வூதியங்களுக்கு ரூ.1,41,205 கோடியும், பாதுகாப்பு சேவைகளுக்கு ரூ.2,82,772 கோடியும், பாதுகாப்பு அமைச்சகத்திற்கு (சிவில்) ரூ.15,322 கோடியும் அடங்கும்.

2024-25 ஆம் ஆண்டில் ராணுவத்திற்கான வருவாய் செலவினம் ரூ.1,92,680 கோடி, கடற்படை மற்றும் இந்திய விமானப்படைக்கு முறையே ரூ.32,778 கோடியும், ரூ.46,223 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்