தாவணகெரேவில் பெண் உள்பட 2 பேரிடம் ரூ.8½ லட்சம் மோசடி
|தாவணகெரேவில் பெண் உள்பட 2 பேரிடம் ரூ.8½ லட்சம் நூதன மோசடி செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. மர்ம நபர்
சிக்கமகளூரு-
தாவணகெரேவில் பெண் உள்பட 2 பேரிடம் ரூ.8½ லட்சம் நூதன மோசடி செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
மர்ம நபர்
தாவணகெரே டவுன் சரஸ்வதி படாவனேயை சேர்ந்தவர் சரத்குமார். இவர் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். மேலும் இன்னொரு தனியார் நிறுவனத்தில் கூடுதல் சம்பளத்திற்கு வேலை தேடி வந்தார். இந்த நிலையில் இவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட ஒரு மர்ம நபர் வேலைக்கு சேர வேண்டுமானால் ரூ.4 லட்சத்து 3 ஆயிரம் முன்பணமாக கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அதை நம்பிய சரத்குமாரும், ஆன்லைன் பணப்பரிமாற்றம் மூலம் அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.4 லட்சத்து 3 ஆயிரத்தை அனுப்பி வைத்தார். அதன்பின்னர் சரத்குமார் அவரை தொடர்பு கொள்ள முயற்சித்தார். ஆனால் அவரால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அப்போது தான் அந்த மர்ம நபர் நூதன முறையில் தன்னை ஏமாற்றி ரூ.4 லட்சத்து 3 ஆயிரத்தை மோசடி செய்ததை சரத்குமார் புரிந்து கொண்டார். இதுபற்றி அவர் தாவணகெரே டவுன் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
பணப்பரிமாற்றம்
இதேபோல் தாவணகெரே மாவட்டம் ஒன்னாளி டவுன் பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுஸ்ரீ. இவரும், அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட ஒரு மர்ம நபர் ரூ.4 லட்சத்து 58 ஆயிரத்தை முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்று கூறி ஆசைகாட்டினார். அதை நம்பிய மஞ்சுஸ்ரீ, அந்த மர்ம நபர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.4 லட்சத்து 58 ஆயிரத்தை ஆன்லைன் பணப்பரிமாற்றம் மூலம் அனுப்பி வைத்தார்.
பணத்தை பெற்றுக் கொண்ட மர்ம நபர் தனது செல்போனை சுவிட்ச்-ஆப் செய்துவிட்டு மாயமாகி விட்டார். தான் மோசடி வலையில் சிக்கி ஏமாந்ததை உணர்ந்த மஞ்சுஸ்ரீ இதுபற்றி தாவணகெரே சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
இந்த 2 வழக்குகளிலும் மொத்தம் ரூ.8 லட்சத்து 61 ஆயிரம் மோசடி செய்யப்பட்டுள்ளது. 2 வழக்குகள் குறித்தும் தாவணகெரே டவுன் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மேலும் மர்ம நபர்களையும் வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த நூதன மோசடி சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.