தமிழ்நாட்டில் மட்டுமே.. ஒரே நாளில் 39 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு
|தமிழ்நாட்டை தவிர எந்த மாநிலத்திலும் முதல் கட்ட தேர்தலில் அனைத்து தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புதுடெல்லி,
நாடாளுமன்றத் தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். நாடு முழுவதும் 7 கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடத்தப்படுகிறது. அதில் முதல் கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் தேர்தல் நடக்கிறது.
முதல் கட்ட தேர்தல் நடைபெறும் உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், மராட்டியம் போன்ற மாநிலங்கள் எல்லாம் தமிழ்நாட்டை காட்டிலும் கூடுதல் தொகுதிகளை கொண்ட மாநிலங்கள் ஆகும்.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார் போன்ற மாநிலங்கள் எல்லாம் தமிழ்நாட்டைவிட குறைந்த தொகுதிகளை கொண்ட மாநிலங்கள் ஆகும். மற்றவை ஓரிரு தொகுதிகளைக் கொண்ட யூனியன் பிரதேசங்கள் ஆகும்.
மேற்கண்ட எந்த மாநிலத்திலும் முதல் கட்ட தேர்தலில் அனைத்து தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடக்கவில்லை.
அதாவது 80 தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேசத்தில் 8 தொகுதிகளுக்கும், 40 தொகுதிகளைக் கொண்ட பீகாரில் 4 தொகுதிகளுக்கும், 42 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்காளத்தில் 3 தொகுதிகளுக்கும் 48 தொகுதிகளைக் கொண்ட மராட்டியத்தில் 5 தொகுதிகளுக்கும் மட்டுமே முதல் கட்டத்தில் ஓட்டுப்பதிவு நடக்கிறது.
அதுபோல் 25 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தானில் 12 தொகுதிகளுக்கும், 29 தொகுதிகளைக் கொண்ட மத்திய பிரதேசத்தில் 6 தொகுதிகளுக்கும், 11 தொகுதிகளைக் கொண்ட சத்தீஷ்காரில் ஒரு தொகுதிக்கும் மட்டுமே ஓட்டுப்பதிவு நடக்கிறது.
39 தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாட்டில் மட்டுமே அந்த 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டத்தில் அதாவது ஒரே நாளில் ஓட்டுப்பதிவு நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.