தமிழ்நாட்டில் 14.4 சதவீதத்தினருக்கு பாதிப்பு இந்தியாவில் 10 கோடி பேருக்கு நீரிழிவு அதிர வைக்கும் ஆய்வு தகவல்கள்
|இந்தியாவில் 10 கோடிக்கும் அதிகமான நீரிழிவு நோயாளிகள் இருக்கின்றனர், தமிழ்நாட்டில் 14.4 சதவீதத்தினருக்கு நீரிழிவு பாதிப்பு உள்ளது என்ற அதிர வைக்கும் ஆய்வு தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் நீரிழிவு நோயாளிகள் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இது அதிரவைப்பதாக அமைந்துள்ளது.
இந்த நிலையில், இந்தியர்கள் ஆரோக்கியம் பற்றிய ஆய்வை சென்னை நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளையும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் (ஐசிஎம்ஆர்) சேர்ந்து நடத்தின. இந்த ஆய்வு கட்டுரை இங்கிலாந்து நாட்டில் வெளியாகிற 'தி லேன்செட் டயாபடீஸ் அண்ட் எண்டாகிரினாலஜி' பத்திரிகையில் வெளியாகி உள்ளது.
அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* இந்தியாவில் 2019-ம் ஆண்டு 7 கோடி பேர் நீரிழிவால் பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது இங்கு நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை 10 கோடியே 10 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது.
* இந்தியாவில் நீரிழிவு பாதித்தோர் விகிதம் 11.4 சதவீதமாக உள்ளது. அதே நேரத்தில் ரத்தக்கொதிப்பு என்று அழைக்கப்படுகிற உயர் ரத்த அழுத்த பாதிப்பு விகிதம் 35.5 சதவீதமாக உள்ளது.
உடல் பருமன், தொப்பை
* இந்தியாவில் உடல் பருமன் பாதிப்பு விகிதம் 28.6 சதவீதம், வயிறு பருமன் (தொப்பை) உடையவர்கள் விகிதம் 39.5 சதவீதமாக இருக்கிறது.
* நம் நாட்டில் நீரிழிவுக்கு முந்தைய நிலையான 'பிரி டயாபடீஸ்' என்ற பிரச்சினை 15.3 சதவீதத்தினருக்கு உள்ளது.
* நாட்டில் 81.2 சதவீதம் பேருக்கு 'டிஸ்லிபிடேமியா' பிரச்சினை உள்ளது. அதாவது இவர்களுக்கு கொழுப்பு, எல்.டி.எல். என்று அழைக்கப்படுகிற கெட்ட கொழுப்பு, எச்.டி.எல். என்னும் நல்ல கொழுப்பு, டிரைகிளிசரைடுகள் ஆகியவற்றில் ஏற்றத்தாழ்வு இருக்கிற நிலை உள்ளது.
* நமது நாட்டில் கோவாவில்தான் நீரிழிவு நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அங்கு 26.4 சதவீதத்தினருக்கு நீரிழிவு உள்ளது. 20.3 சதவீதத்தினருக்கு 'பிரி டயாபடீஸ்' இருக்கிறது.
தமிழ்நாட்டில் 14.4 சதவீதம்
* தமிழ்நாட்டில் 14.4 சதவீதம் பேருக்கு நீரிழிவு பாதிப்பு உள்ளது. 'பிரி டயாபடீஸ்' 10.2 சதவீதத்தினருக்கு இருக்கிறது.
* 'பிரி டயாபடீஸ்' பிரச்சினைக்கு ஆளாகிறவர்களில் 3-ல் ஒருவருக்கு சில ஆண்டுகளிலேயே நீரிழிவு பாதிக்கிறது.
* நீரிழிவு மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள 10 மாநிலங்கள்-யூனியன் பிரதேசங்கள் பட்டியலில் கோவா, புதுச்சேரி, கேரளா, சண்டிகார், டெல்லி, தமிழ்நாடு, மேற்கு வங்காளம், சிக்கிம், பஞ்சாப், அரியானா ஆகியவை இடம் பிடித்துள்ளன.
இவ்வாறு அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஐதராபாத்தில் ஆஸ்துமா நோயாளிகளுக்கு மீன் 'பிரசாதம்' 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது