சிருங்கேரியில் பெண் கொலை வழக்கில் கள்ளக்காதலன் சிக்கினார்
|சிருங்கேரியில் பெண் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த கள்ளக்காதலனை போலீசார் 3 மாதங்களுக்கு பின்பு கைது செய்தனர்.
சிக்கமகளூரு :-
கள்ளக்காதல் விவகாரம்
சிக்கமகளூரு மாவட்டம் சிருங்கேரி தாலுகாவை அடுத்த தியாவனா கிராமத்தை சேர்ந்தவர் வசந்தி (வயது 40) இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். அதே பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் வேலை பார்த்து வந்தவர் பிரகாஷ் (29).
இருவரும் ஒரே பகுதியில் இருந்ததால் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். இந்தநிலையில் பிரகாஷின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
இதற்காக பெண் தேடி வந்தனர். இது வசந்திக்கு தெரியவந்தது. அவர் பிரகாஷிடம் திருமணம் முடிந்தாலும் தன்னுடன் பழகுவதை நிறுத்த கூடாது என்று கூறினார். ஆனால் அதற்கு பிரகாஷ் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்தநிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 29-ந் தேதி இது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
பெண் அடித்து கொலை
அப்போது வசந்தி, பிரகாஷிடம் உல்லாசமாக இருக்கலாம் வா என்று அழைத்துள்ளார். அதன்படி பிரகாஷ் சென்றதும், இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது கோபமடைந்த பிரகாஷ், வசந்தியை தாக்கினார்.
இதில் பலத்த காயமடைந்த வசந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து பிரகாஷ் வசந்தியின் உடலை தியாவனாவில் உள்ள சாலையோரம் குழி தோண்டி புதைத்தார்.
இதற்கிடையில் தாயை காணவில்லை என்று வசந்தியின் மகன் நவீன் சிருங்கேரி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் ேபரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது வசந்தியிடம் செல்போனில் பேசியவர்கள் விவரங்களை போலீசார் சேகரித்தனர். அதில் இறுதியாக பிரகாஷ்தான் பேசியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து பிரகாசை போலீசார் தேடி வந்தனர்.
கள்ளக்காதலன் கைது
இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிரகாசை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் பிரகாஷ், வசந்தியை கொலை செய்ததை ஒப்பு கொண்டார். அதாவது திருமணத்திற்கு தடையாக இருந்ததால் கொலை செய்ததாக கூறியுள்ளார்.
இதையடுத்து பிரகாசை கைது செய்த போலீசார், அவர் கொடுத்த தகவலின் பேரில் வசந்தியின் உடலை தோண்டி எடுத்து, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் பிரகாஷ் மீது கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.