சோமவார்பேட்டையில் மின்வேலியில் சிக்கி காட்டு யானை செத்தது
|சோமவார்பேட்டையில் மின்வேலியில் சிக்கி மின்சாரம் தாக்கி காட்டு யானை செத்தது. இதுதொடர்பாக விவசாயியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
குடகு-
சோமவார்பேட்டையில் மின்வேலியில் சிக்கி மின்சாரம் தாக்கி காட்டு யானை செத்தது. இதுதொடர்பாக விவசாயியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
செத்து கிடந்த காட்டு யானை
குடகு மாவட்டம் சோமவார்பேட்டை தாலுகா சுண்டிகொப்பா அருகே பார்சிகெேர கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த கிராமத்தை சேர்ந்த உதயகுமார் என்ற விவசாயிக்கு சொந்தமான தோட்டத்தில் காட்டு யானை ஒன்று செத்து கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக வந்தவர்கள், உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் சம்பவ இடத்துக்கு கால்நடை டாக்டர்கள் வரவழைக்கப்பட்டனர். டாக்டர்கள் காட்டு யானைக்கு அதேப்பகுதியில் வைத்து பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் வனத்துறையினர் காட்டு யானையின் உடலை அதேப்பகுதியில் குழிதோண்டி புதைத்தனர்.
மின்வேலியில் சிக்கி...
இதுகுறித்து வனத்துறையினர் நடத்திய விசாரணையில், செத்துபோனது 20 வயது நிரம்பிய ஆண் யானை ஆகும். பார்சிகெரே கிராமத்தில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகள் அட்டகாசம் அதிகரித்து காணப்படுகிறது. யானைகளிடம் இருந்து விளைபயிர்களை காப்பாற்ற விவசாயி உதயகுமார் தனது தோட்டத்தை சுற்றி வேலி அமைத்து மின் இணைப்பு கொடுத்துள்ளார்.
இந்த நிலையில், வனப்பகுதியில் இருந்து உணவு தேடி வந்த காட்டு யானை, மின்வேலியை மிதித்து உள்ளே செல்ல முயன்றுள்ளது. அப்போது மின்வேலியில் இருந்த மின்சாரம், காட்டு யானை மீது பாய்ந்தது அது சம்பவ இடத்திலேயே செத்தது தெரிய வந்தது.
விவசாயிக்கு வலைவீச்சு
இதையடுத்து வனத்துறையினர் சுண்டிகொப்பா போலீசில் புகார் அளித்தனர். இதற்கிடையே விவசாயி உதயகுமார் தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உதயகுமாரை வலைவீசி தேடி வருகிறார்கள்.