சிவமொக்காவில் திருட்டு வழக்கில் வாலிபர் கைது
|சிவமொக்காவில் திருட்டு வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சிவமொக்கா :-
சிவமொக்கா மாவட்டத்தில் இரவு நேரத்தில் நடக்கும் திருட்டு, கொள்ளை சம்பவங்களை தடுக்க போலீசார் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் போலீசார் பத்ராவதி புறநகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்தார். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் மண்டியா மாவட்டம் சாத்தனூரை சேர்ந்த அப்பு என்ற ஆகாஷ் கவுடா என்று தெரியவந்தது. பத்ராவதி பகுதியில் பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு திருட முயன்றதாக தெரியவந்தது.
இதையடுத்து ஆகாஷ் கவுடாவை கைது செய்த போலீசார் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்தனர். அப்போது ஆகாஷ் கவுடாவின் கைரேகையை ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில் ஆகாஷ் கவுடாவிற்கு சிவமொக்கா மட்டுமின்றி வெளி மாவட்டத்திலும், பல திருட்டு வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
அதாவது மண்டியாவில் 4 திருட்டு வழக்குகள் மற்றும் துமகூருவில் ஒரு கொள்ளை வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. மண்டியாவில் பதிவாகியிருந்த ஒரு திருட்டு வழக்கில் கோர்ட்டு ஆகாஷ் கவுடாவிற்கு பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது.
அந்த வழக்கில் சிக்கி கொள்ளாமல் இருக்க சிவமொக்காவில் தலைமறைவாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஆகாஷ் கவுடா மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.