சிவமொக்காவில் சபாநாயகரை கண்டித்து பா.ஜனதாவினர் போராட்டம்
|சிவமொக்காவில் சபாநாயகரை கண்டித்து பா.ஜனதாவினர் போராட்டம் நடத்தினர்.
சிவமொக்கா-
கர்நாடக சட்டசபையில் எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பயன்படுத்தியதை கண்டித்து பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்) கட்சி எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதில் துணை சபாநாயகர் ருத்ரப்பா லமானி மீது காகிதங்களை கிழித்து பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் எறிந்தனர்.
இதனால், ஆர்.அசோக், அரக ஞானேந்திரா, சுனில் குமார், எத்னால் உள்பட 10 பேரை சபாநாயகர் யு.டி.காதர் இடைநீக்கம் செய்தார். இதனை கண்டித்து சட்டசபையை நேற்றுமுன்தினம் பா.ஜனதாவினர் புறக்கணித்தனர்.
மேலும் மாநிலம் முழுவதும் பா.ஜனதாவினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில் நேற்று சிவமொக்காவில் பி.எச்.சாலை சிவப்பா நாயக்கர் சிலை அருகே சபாநாயகர் யு.டி.காதரை கண்டித்து பா.ஜனதாவினர் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்திற்கு முன்னாள் முதல்-மந்திரி ஈசுவரப்பா தலைமை தாங்கினார். பா.ஜனதாவை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 10 பேரை சபாநாயகர் யு.டி.காதர் இடைநீக்கம் செய்தது ஜனநாயக படுகொலை செயல் என ஈசுவரப்பா கூறினார்.
மேலும் மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் சன்னபசப்பா எம்.எல்.ஏ.,டி.எஸ். அருண் எம்.எல்.சி., மாநகராட்சி மேயர் சிவகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.