சிவமொக்காவில் தமிழ் மாணவர்களுடன் கலந்துரையாடிய கலெக்டர் செல்வமணி
|சிவமொக்காவில் தமிழ் மாணவர்களுடன் கலெக்டர் செல்வமணி கலந்துரையாடினார்.
சிவமொக்கா;
பள்ளி கட்டிடம் திறப்பு
சிவமொக்கா நகர் பி.எச்.சாலையில் அரசு தமிழ் உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ரூ.66 லட்சம் செலவில் 10 அறைகள் கொண்ட கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று அந்த கட்டிடத்தின் திறப்பு விழா நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் செல்வமணி கலந்துகொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தார்.
பின்னர் அவர், மாநகராட்சி சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல் டிஜிட்டல் நூலகத்தையும் பார்வையிட்டார். மேலும் ஆசிரியர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
மாணவர்களுடன் கலந்துரையாடல்
இதையடுத்து கலெக்டர் செல்வமணி, பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் மாணவர்களிடம் தமிழ் பாடத்தில் திருக்குறள் பற்றியும், அகநானூறு, புறநானூறு பற்றியும், அறிவியல் பாடத்தில் மின்சாரம் உற்பத்தியாகும் முறை பற்றியும் கேள்வி கேட்டார். பின்னர் மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் பாடம் எடுத்தார்.
பின்னர் மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்த அவர், நன்கு படிக்கும்படி அறிவுறுத்தினார். பின்னர் மாணவ-மாணவிகளுடன் கலெக்டர் செல்வமணி குழு புகைப்படம் எடுத்து கொண்டார். இதையடுத்து அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
கோரிக்கை
முன்னதாக சிவமொக்கா தமிழ் தாய் சங்கத்தினர், பள்ளி மாணவர்களின் பெற்றோர் சங்கத்தினர் மற்றும் தமிழ் இளைஞர் நற்பணி மன்றத்தினர் கலெக்டர் செல்வமணியை சந்தித்து பேசினர். சிவமொக்கா அரசு தமிழ் உயர்நிலை பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்வி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதனை ஏற்றுக் கொண்ட கலெக்டர் செல்வமணி, இதுபற்றி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.