சிவமொக்காவில், 3 இடங்களில் முன்பதிவு ஆட்டோ சேவை திட்டம் தொடக்கம்
|சிவமொக்காவில், 3 இடங்களில் முன்பதிவு ஆட்டோ சேவை திட்டத்தை வருவாய் துறை அதிகாரி தொடங்கி வைத்தார்.
சிவமொக்கா;
சிவமொக்கா நகரில் முன்பதிவு ஆட்டோ சேவையை தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுதொடர்பாக சிவமொக்கா போக்குவரத்து துறை கூடுதல் ஆணையர் காயத்ரி தேவி, சிவமொக்கா மாவட்ட வருவாய் துறை அதிகாரி கங்காதரிடம் தெரிவித்தார்.
அதன்பேரில் சிவமொக்கா டவுனில் ரெயில் நிலையம், அரசு பஸ் நிலையம், சகாயாத்ரி கல்லூரி ஆகிய 3 இடங்களில் முன்பதிவு ஆட்டோ சேவையை தொடங்க அதிகாரி கங்காதர் உத்தரவிட்டார். முன்னதாக இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் அதிகாரி கங்காதர் தலைமையில் சிவமொக்கா டவுனில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் நடந்தது.
கூட்டத்தில் ஆட்டோ டிரைவர்கள், பொதுமக்கள், வியாபாரிகள், தனியார் பஸ் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய ஆட்டோ டிரைவர்கள் முன்பதிவு ஆட்டோ சேவை திட்டத்தை தொடங்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் பொதுமக்கள் இந்த திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, ஆட்டோ டிரைவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
ஆட்டோ டிரைவர்கள் சீருடை அணிவதில்லை, மீட்டர் போடுவது இல்லை, அரசு அறிவித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் கேட்டு தொல்லை கொடுக்கிறார்கள் என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினர். இதையடுத்து பொதுமக்களின் நலனே முக்கியம் என்று கூறி முன்பதிவு ஆட்டோ சேவையை ரெயில் நிலையம் உள்பட 3 இடங்களில் அதிகாரி கங்காதர் தொடங்கி வைத்தார்.