கோவில்களுக்கு வரி விதிக்கும் கர்நாடக அரசின் புதிய சட்ட மசோதா தோல்வி.. சித்தராமையாவுக்கு பின்னடைவு
|கர்நாடக மேல்-சபையில் எதிர்க்கட்சியான பா.ஜ.க. கூட்டணிக்கு மெஜாரிட்டி இருப்பதால் மசோதா தோற்கடிக்கப்பட்டது.
பெங்களூரு:
கர்நாடகாவில் கோவில்களுக்கு வரிவிதிக்க வகை செய்யும் 'கர்நாடக இந்து சமய நிறுவனங்கள் மற்றும் அறநிலைய அறக்கட்டளை சட்டத்திருத்த மசோதா 2024' சட்டசபையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
அதாவது, ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடி வரை வருமானம் வரும் கோவில்கள் அந்த வருமானத்தில் 5 சதவீதத்தையும், ரூ.1 கோடிக்கு மேல் வருவாய் இருந்தால் அதில் 10 சதவீதத்தையும் வரியாக வழங்கவேண்டும் என்ற அம்சம் இந்த சட்டத்திருத்தத்தில் இடம்பெற்றிருந்தது. இதற்கு பா.ஜ.க. கடும் எதிர்ப்பு தெரிவித்தது. கோவில் வருவாயை வேறு நோக்கங்களுக்கு அரசு பயன்படுத்துவதாக பா.ஜ.க. தலைவர்கள் குற்றம்சாட்டினர்.
இந்த நிலையில் கர்நாடக மேல்-சபையில் நேற்று மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் மேல்-சபையில் எதிர்க்கட்சியான பா.ஜ.க. கூட்டணிக்கு மெஜாரிட்டி இருப்பதால் மசோதா தோற்கடிக்கப்பட்டது. இது முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
கர்நாடக மேல்-சபையில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு 30 உறுப்பினர்கள் உள்ளனர். பா.ஜ.க.வுக்கு 35 உறுப்பினர்கள் உள்ளனர். மதச்சார்பற்ற ஜனதா தளம் 8 உறுப்பினர்களை கொண்டுள்ளது. ஒருவர் சுயேட்சை உறுப்பினராக உள்ளார். ஒரு உறுப்பினர் பதவி காலியாக உள்ளது.