டெல்லி அவசர சட்ட மசோதாவுக்கு பிஜூ ஜனதா தளம் ஆதரவு
|டெல்லி அவசர சட்ட மசோதாவுக்கு பிஜூ ஜனதா தளம் கட்சி தனது ஆதரவை தெரிவித்துள்ளது.
டெல்லி நிர்வாகம் தொடர்பான அவசர சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், சர்ச்சைக்குரிய இந்த மசோதாவுக்கு பிஜூ ஜனதா தளம் கட்சி தனது ஆதரவை தெரிவித்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஸ்மித் பத்ரா பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், "டெல்லி அவசர சட்ட மசோதாவை எங்கள் கட்சி ஆதரிக்கும். அதேபோல் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிராக நாங்கள் வாக்களிப்போம். இது தொடர்பாக மாநிலங்களவை மற்றும் மக்களவையில் உள்ள பிஜூ ஜனதா தளம் எம்.பி.க்களுக்கு அவசர நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது" என்றார்.
ஏற்கனவே ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் டெல்லி அவசர சட்ட மசோதாவை ஆதரிப்பதாக தெரிவித்த நிலையில் தற்போது பிஜூ ஜனதா தளம் அந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.