சாம்ராஜ்நகரில், மாரியம்மன் கோவில் தேரோட்டத்தின்போது தாக்குதல்-6 பேர் கைது
|சாம்ராஜ்நகரில் மாரியம்மன் கோவில் தேரோட்டத்தின்போது பா.ஜனதா இளைஞர் அணி தலைவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கொள்ளேகால்:-
இளைஞர் அணி தலைவர்
சாம்ராஜ்நகர் (மாவட்டம்) டவுனில் மல்லிகே மாரம்மா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் அந்த கோவிலில் திருவிழாவையொட்டி தேரோட்டம் நடந்தது. இதில் சாம்ராஜ்நகர் நகர பா.ஜனதா இளைஞர் அணி தலைவர் கிரண் கலந்து கொண்டார். அவரது தலைமையில் ஏராளமான பா.ஜனதா தொண்டர்களும், இந்து அமைப்பினரும் தேரோட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த சந்தர்ப்பத்தில் கிரண் மீது ஒரு கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தியது. முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கிரண் உடனடியாக சாம்ராஜ்நகர் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீசார் குவிப்பு
இதுபற்றி கிரண் அளித்த புகாரின்பேரில் சாம்ராஜ்நகர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கிரணை தாக்கியது சாம்ராஜ்நகர் டவுன் நாயக்கர் பெரிய வீதியில் வசித்து வரும் பிரவீன், சந்துரு, பிரஜ்வெல், பிரசாந்த் உள்பட 6 பேர் என்பது தெரியவந்தது. அதையடுத்து போலீசார் அவர்கள் 6 பேரையும் கைது செய்தனர்.
இதற்கிடையே கிரண் மீது பிரவீனும் போலீசில் புகார் செய்துள்ளார். அதில் கிரண் தான் முதலில் தன்னை தாக்கியதாக கூறியிருந்தார். அதன்பேரிலும் போலீசார் கிரண் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.