மைசூருவில் தொடர் அட்டகாசம் செய்த சிறுத்தை கூண்டில் சிக்கியது
|மைசூருவில், தொடர் அட்டகாசம் செய்துவந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது. இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மைசூரு;
சிறுத்தை அட்டகாசம்
மைசூரு (மாவட்டம்) தாலுகாவில் ரத்தனஹள்ளி கிராமம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இதனால் வனப்பகுதியில் இருந்து சிறுத்தை, புலி உள்ளிட்ட வனவிலங்குகள் இரைதேடி ரத்தனஹள்ளி மற்றும் அதன்சுற்றுவட்டார கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
மேலும் நாய், ஆடு-மாடுகளை அடித்து கொன்று வருகின்றன. இந்த நிலையில் ரத்தனஹள்ளி கிராமத்தில் கடந்த சில நாட்களாக சிறுத்தை ஒன்று முகாமிட்டு அட்டகாசம் செய்து வந்துள்ளது. மேலும் சிறுத்தை, கால்நடைகளை அடித்து கொன்று பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது. இதனால் கிராம மக்கள், வனத்துறை அதிகாரிகளிடம் சிறுத்தையை பிடிக்க கோரிக்கை வைத்தனர்.
இதனை ஏற்ற வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுத்தை நடமாடிய கால்தடங்களை பார்வையிட்டனர். இதைதொடர்ந்து வனத்துறையினர், அதேப்பகுதியை சேர்ந்த விவசாயி குமார் என்பவரின் தோட்டத்தில் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்திருந்தனர்.
மேலும் சிறுத்தைக்கு இரையாக கூண்டில் மாமிசம் வைத்து தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
கூண்டில் சிக்கியது
இந்த நிலையில் நேற்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை, அந்த கூண்டில் வசமாக சிக்கியது. இதையறிந்த கிராம மக்கள், வனத்துறையினருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வனத்துறையினர் ஜீப்பில் விரைந்து வந்து கூண்டில் சிக்கிய சிறுத்தையை பார்வையிட்டனர்.
பின்னர் கூண்டுடன் சிறுத்தையை மீட்டு ஜீப்பில் ஏற்றி பந்திப்பூர் தேசிய வன உயிரியல் பூங்காவிற்கு கொண்டு சென்றனர். பிடிபட்டது 4 வயது ஆண் சிறுத்தையாகும். தொடர் அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை, வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.