மைசூருவில் மின்விளக்குகள் அமைக்கும் இடங்களில் மேயர், கமிஷனர் ஆய்வு
|தசரா விழாவையொட்டி மைசூருவில் மின்விளக்குகள் அமைக்கும் இடங்களில் மேயர், கமிஷனர் ஆய்வு செய்தனர்.
மைசூரு
தசரா விழா
மைசூருவில் உலகப்பிரசித்தி பெற்ற தசரா விழா இந்த ஆண்டு அடுத்த மாதம்(அக்டோபர்) 15-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இந்தநிலையில் தசரா விழாவில் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று மின்விளக்கு அலங்காரம் ஆகும். இதனை காண்பதற்கே லட்சக்கணக்கானோர் குவிவார்கள்.
இ்ந்த நிலையில் மின்விளக்குகள் அமைக்கும் மைசூரு டவுனில் முக்கிய சர்க்கிள்களில் மாநகராட்சி மேயர் சிவகுமார், மாநகராட்சி கமிஷனர் ரகுமான் செரீப் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
பி.என். ரோட்டில் உள்ள ஜெயசாமராஜேந்திர உடையார் சர்க்கிள், மற்றும் சிலை, அரண்மனை முன் பகுதியில் உள்ள சாமராஜ உடையார் சர்க்கிள் மற்றும் சிலை, பெரிய கடிகார தூண், மற்றும் அம்பேத்கர் சிலை, கே.ஆர். சர்க்கிளில் உள்ள நால்வடி கிருஷ்ணராஜ உடையார் சர்க்கிள் மற்றும் சிலை, கே.ஆர். ஆஸ்பத்திரி சர்க்கிள், ரெயில் நிலையம் முன்பு உள்ள சர்க்கிள் மற்றும் சிலை, மெட்ரோ போல் சர்க்கிள் ஆகிய இடங்களில் மேயர் சிவகுமார், மாநகராட்சி கமிஷனர் ரகுமான் செரீப் ஆய்வு செய்தனர்.
மின் விளக்கு அலங்காரம்
அப்போது மேயர் கூறுகையில், இந்த ஆண்டு தசரா விழாவில் மின் அலங்காரம் பொதுமக்களை கவரும் வகையில் அமைக்கப்படுகிறது. மைசூரு கலாசாரம் மற்றும் சுற்றுலா நகரம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் தசரா விழாவையொட்டி குவிவார்கள்.
அப்போது இரவு நேரங்களில் மின் விளக்குகள் சுற்றுலா பயணிகளை கவர வேண்டும். மைசூரு நகரத்தையே அழகாக வைக்க மின்விளக்குகள் ஜொலிக்க வேண்டும். பண்டிகை நாட்களில் அரண்மனை வளாகம், முக்கிய சர்க்கிள்களில் மின்விளக்கு அலங்காரம் அமைப்பதற்கு அரசிடம் அனுமதி கேட்கப்படும்.
பணிகள் தொடங்கப்படும்
மேலும் அதற்கான அறிக்கையும் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மைசூரு நகரம் மேலும் வளர்ச்சி அடையும். சுற்றுலா பயணிகள் வருகையால் அரசிற்கு வருமானம் கிடைக்கும். விரைவில் தசரா விழா பணிகள் தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.