அட்டகாசம் செய்த சிறுத்தை கூண்டில் சிக்கியது; கிராம மக்கள் மகிழ்ச்சி
|மைசூரு தாலுகாவில் அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது. இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மைசூரு:
மைசூரு தாலுகாவில் அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது. இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சிறுத்தை அட்டகாசம்
மைசூரு (மாவட்டம்) தாலுகா உயிலாளு கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இதனால் வனப்பகுதியில் இருந்து இரைதேடி வெளியே வரும் சிறுத்தை, புலி, காட்டுயானைகள் உயிலாளு கிராமத்தில் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக சிறுத்தை ஒன்று கிராமத்திற்குள் நுழைந்து ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடி வருகிறது. இதனால் கிராமமக்கள் பீதியில் உள்ளனர்.
மேலும் அவர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி உள்ளனர். மேலும் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்லவே பயத்தில் இருந்து வருகிறார்கள். அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கக்கோரி கிராமமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்தநிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு உயிலாளு கிராமத்தில் சிறுத்தை ஒன்று உலா வந்தது. இதனை கிராமமக்கள் பார்த்துள்ளனர்.
கிராம மக்கள் முற்றுகை
:மேலும் அவர்கள் சிறுத்தையை வீடியோ, புகைப்படம் எடுத்தனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் வனத்துறையினரை கிராமமக்கள் முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், கடந்த சில நாட்களாக சிறுத்தை ஒன்று கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.
இதனால் நாங்கள் உயிர் பயத்தில் உள்ளோம். மேலும் கால்நடைகளையும் சிறுத்தை அடித்து கொன்று வருகிறது. எனவே அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வனத்துறையினரிடம் கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்ற வனத்துறையினர் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் இரும்பு கூண்டு ஒன்றை வைத்தனர்.
வனத்துறை கூண்டில் சிக்கியது
அதில், இறைச்சிக்காக ஆட்டையும் கட்டி வைக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு இரை தேடி வனப்பகுதியில் இருந்து வெளிய வந்த சிறுத்தை வனத்துறை வைத்திருந்த கூண்டில் சிக்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் சிறுத்தையை கூண்டுடன் லாரியில் ஏற்றி நாகரஒலே வனப்பகுதிக்கு அவர்கள் கொண்டு சென்றனர். பிடிபட்டது 2½ வயது பெண் சிறுத்தை என வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை பிடிபட்டதால் உயிலாளு கிராமமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.