மங்களூருவில், முன்விரோதத்தில் பி.யூ. கல்லூரி மாணவருக்கு கத்திக்குத்து
|மங்களூருவில், முன்விரோதத்தில் பி.யூ. கல்லூரி மாணவருக்கு கத்திக்குத்தியவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
மங்களூரு;
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் நந்தூர் அருகே உள்ள பி.யூ.கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்த மாணவர் ஒருவர், தனது நண்பர்களுடன் மாலை வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
நந்தூர் சந்திப்பு பகுதியில் சென்றபோது அங்கு மற்றொரு பி.யூ.கல்லூரியில் படிக்கும் 2-ம் ஆண்டு மாணவர்கள் 2 பேர் வந்து, மாணவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அவர்கள், மாணவரை அங்குள்ள கோவிலுக்கு பின்புறம் அழைத்து சென்று மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளனர்.
இதையடுத்து அவர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பிசென்றுவிட்டனர். இதில் பலத்த கத்திக்குத்து காயம் அடைந்த மாணவரை, அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அருகே உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றி தகவல் அறிந்த மங்களூரு நகர் கிழக்கு போலீசார் விசாரணை நடத்தினர். அதில் முன்விரோதத்தில், பி.யூ.கல்லூரி மாணவரை மற்றொரு கல்லூரி மாணவர்கள் 2 பேர் கத்தியால் குத்தியது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.