< Back
தேசிய செய்திகள்
மண்டியா மாவட்டத்தில், ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 199 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க முடிவு
தேசிய செய்திகள்

மண்டியா மாவட்டத்தில், ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 199 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க முடிவு

தினத்தந்தி
|
27 Aug 2022 9:50 PM IST

மண்டியா மாவட்டத்தில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக 199 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி சாந்தா எல்.ஹுல்மணி கூறினார்.

மண்டியா;

ஆலோசனை கூட்டம்

மண்டியா மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் நேற்று முன்தினம் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் மண்டியாவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி சாந்தா எல்.ஹுல்மணி தலைமை தாங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்திற்கு பின் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மண்டியா மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பு வழங்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதில் முதல் கட்டமாக ஸ்ரீரங்கப்பட்டணாவில் 43 வீடுகள், மண்டியாவில் 82, பாண்டவபுராவில் 49, மலவள்ளியில் 25 என மொத்தம் 199 வீடுகளுக்கு ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பு வழங்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது.

குடிநீர் இணைப்பு

ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க தலா ரூ.25 ஆயிரம் செலவு ஆகும் என்று மதிப்பிடப்பட்டு இருக்கிறது. அதை அதிகாரிகள் பரிசீலித்து இன்னும் குறைவான செலவில் குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிராமப்புறங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைப்பது குறித்தும், அதற்கான இடம் தேர்வு குறித்தும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அந்த இடங்கள் கிராம பஞ்சாயத்து எல்லைக்குள் வருகிறதா, வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் வருகிறதா என்பதை கண்டறிந்து அதற்கு தகுந்தபடி உரிய அனுமதி பெற வேண்டும்.

இந்த திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், அங்கன்வாடி மையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள், சுகாதார நிலையங்கள், கிராம பஞ்சாயத்து அலுவலகங்கள், விவசாய சங்க அலுவலகங்களுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்