குஷால்நகரில் கால்வாயில் மூழ்கி சிறுவன் சாவு
|குஷால்நகரில் கால்வாயில் மூழ்கிய சிறுவன் உயிரிழந்தான்
குடகு
குடகு மாவட்டம் குஷால்நகர் தாலுகா பேடகோட்டாவை சேர்ந்தவர் அனிஷ். இந்த சிறுவன் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தான். நேற்று காலை குஷால்நகரில் உள்ள ஹாரங்கி கால்வாயில் நண்டு பிடிப்பதற்காக சென்றிருந்தான்.
கால்வாய் நீரில் இறங்கி நண்டு பிடித்து கொண்டிருந்தபோது, திடீரென்று ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது நீரில் மூழ்கி அனிஷ் உயிரிழந்தான். இதுகுறித்து குஷால்நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தீயணைப்பு படையினர் உதவியுடன் அனிஷ் உடலை தேடினர்.
அப்போது தண்ணீர் அதிகமாக சென்றதால் உடலை கண்டுபிடிக்க முடியாமல் போனது. இதையடுத்து கால்வாயில் வந்து கொண்டிருந்த நீரை நிறுத்தி வைத்து உடலை தேடினர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் அனிஷ் உடல் கைப்பற்றப்பட்டது. உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக குஷால்நகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில் இதுகுறித்து தகவல் அறிந்ததும் தொகுதி எம்.எல்.ஏ. மந்தர் கவுடா சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார். பின்னர் அவர் பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து குஷால்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.