< Back
தேசிய செய்திகள்
கர்நாடகத்தில்  பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை
தேசிய செய்திகள்

கர்நாடகத்தில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை

தினத்தந்தி
|
29 Jun 2023 6:45 PM GMT

கர்நாடகத்தில் பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடந்தது.

மங்களூரு-

கர்நாடகாவில் பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடந்தது.

பக்ரீத் பண்டிகை

நாடு முழுவதும் உள்ள முஸ்லிம்களால் ரம்ஜான் பண்டிகைக்கு அடுத்தப்படியாக கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை பக்ரீத் ஆகும். இறைவனின் தூதரான இப்ராஹீமின் தியாகத்தை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய 12-வது மாதமான துல் ஹஜ்ஜின் 10-வது நாளில் பக்ரீத் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் அனைவரும் புத்தாடை அணிந்து ஆண்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபடுவது வழக்கம்.

இந்த நிலையில் கர்நாடக மாநிலம் முழுவதும் பக்ரீத் பண்டிகையையொட்டி நேற்று சிறப்பு தொழுகை நடந்தது. இதையொட்டி தட்சிண கன்னடா மங்களூரு லைட் ஹவுஸ் பகுதியில் உள்ள மைதானத்தில் முஸ்லிம்கள் நேற்று காலை சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இதில், ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

சிறப்பு தொழுகை

தொழுகை முடிந்து ஒருவருக்கொருவர் கட்டி தழுவி அன்பை பரிமாறி கொண்டனர். உடுப்பி மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகையை கோலாகமாக முஸ்லிம்கள் கொண்டாடினர். உடுப்பி டவுன், காபு, பிரம்மாவர், குந்தாப்பூர், பைந்தூர், ஹெப்ரி, கார்கலா ஆகிய பகுதிகளில் உள்ள மசூதிகளில் பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடந்தது.

முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து தொழுகையில் ஈடுபட்டனர். சில மசூதிகளில் பெண்களுக்கு தொழுகை நடத்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் பெண்கள் தனது குடும்பத்தினருடன் தொழுகையில் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

அசம்பாவிதங்கள் இன்றி...

இதேபோல் தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. அங்குள்ள ஈத்கா மைதானத்தில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தினர். இந்து- முஸ்லிம்கள் பிரச்சினை காரணமாக ஈக்தா மைதானத்தில் நிகழ்ச்சிகள் நடத்த ஐகோர்ட்டு தடைவிதித்து இருந்தது. இந்த ஆண்டு பக்ரீத் பண்டிகையையொட்டி தொழுகை நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது.

இதனால் எந்தவித அசம்பாவிதங்கள் இன்றி முஸ்லிம்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடினர்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

இதேபோல் சிவமொக்கா மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள ஈத்கா மைதானத்தில் பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் நேற்று காலை 8.30 மணிக்கு சிறப்பு தொழுகை நடத்தினர். பக்ரீத் பண்டிகையொட்டி மாநிலம் முழுவதும் உள்ள மசூதி, தொழுகை நடந்த மைதானங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்