இந்தியாவோ, வெளிநாடோ ராகுல் காந்தியின் ஒரே வேலை பிரதமர் மோடியை திட்டுவது: மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ
|இந்தியாவோ அல்லது வெளிநாடோ ராகுல் காந்தியின் ஒரே வேலை பிரதமர் மோடியை திட்டுவது என மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்று உள்ளார். அவர் கலிபோர்னியாவில் அமெரிக்க இந்தியர்கள் மத்தியில் உரையாற்றியபோது, இந்திய பிரதமர் மோடிஜிக்கு அருகில் கடவுள் உட்கார்ந்தால், பிரபஞ்சம் எப்படி இயங்குகிறது என கடவுளுக்கே அவர் பாடம் எடுப்பார்.
வேலைவாய்ப்பு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட அத்தியாவசிய பிரச்சனைகளை எதிர்கொள்ளவும் புரிந்து கொள்ளவும் இந்தியாவின் மோடி அரசு மறுக்கிறது. செங்கோல் மனோபாவம் கொண்டவர்களிடம் நாம் வேறு எதனையும் எப்படி எதிர்பார்க்க முடியும்? என பேசினார்.
அவரது இந்த பேச்சு பற்றி மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ கூறும்போது, இந்தியாவோ அல்லது வெளிநாடோ, ராகுல் காந்திக்கு ஒரேயொரு வேலை மட்டுமே உள்ளது. பிரதமர் மோடியை தகாத வகையில் திட்டுவது மற்றும் நாட்டுக்கு அவதூறு ஏற்படுத்துவது ஆகும்.
பிரதமர் மோடியை இந்தளவுக்கு அவர் ஏன் வெறுக்கிறார்? நாட்டுக்கு எதிராக ஏன் பேசுகிறார்? என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒரு பொதுஜனம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாதவற்றை அவருடைய குடும்பத்திற்கு இந்த நாடு வழங்கியது என அவர் தெரிந்து கொள்ள வேண்டும்.
பொதுஜனத்தில் இருந்து வந்த ஒருவர் நாட்டின் பிரதமராகி விட்டார் என்பதனை ராகுல் காந்தியால் சகித்து கொள்ள முடியவில்லை. அவருடைய பேச்சு, பேசும் விதம் ஆகியவற்றை எவரொருவரும் மிக தீவிரத்துடன் கவனத்தில் எடுத்து கொள்ளவில்லை என்று ரிஜிஜூ கூறியுள்ளார்.