உப்பள்ளியில் வடமாநில தொழிலாளி தற்கொலை
|உப்பள்ளியில் தண்டவாளத்தி்ல் தலை வைத்து வடமாநில தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
உப்பள்ளி-
ராஜஸ்தான் மாநிலம் பாமோர் மாவட்டம் சாப்ரா கிராமத்தை சேர்ந்தவர் நரேந்திரகுமார் தேவராம் (வயது21). இவர் தார்வார் மாவட்டம் உப்பள்ளி அசோக்நகரில் உள்ள எலெக்ட்ரிக் கடையில் பணியாற்றி வந்தார். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடையில் வேலை செய்பவர்கள் நரேந்திர குமாரிடம் தகராறு செய்துள்ளனர். இதனால் அவர் மனவேதனையில் இருந்தார்.
மேலும் யாரிடமும் பேசாமல் நரேந்திர குமார் இருந்துள்ளார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் வேலை முடிந்து அவர் உப்பள்ளி ரெயில் நிலையம் சென்றார்.
அப்போது நரேந்திரகுமார் தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த உப்பள்ளி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நரேந்திர குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உப்பள்ளி கிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நரேந்திரகுமாரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அசோக் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.