< Back
தேசிய செய்திகள்
உப்பள்ளியில் வாலிபர் கொலை வழக்கில் 5 பேர் சிக்கினர்
தேசிய செய்திகள்

உப்பள்ளியில் வாலிபர் கொலை வழக்கில் 5 பேர் சிக்கினர்

தினத்தந்தி
|
12 July 2023 6:45 PM GMT

உப்பள்ளியில் வாலிபரை கொலை செய்த வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

உப்பள்ளி-

உப்பள்ளியில் வாலிபரை கொலை செய்த வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

முன்விரோதத்தில் தகராறு

தார்வார் மாவட்டம் உப்பள்ளி டவுன் பகுதியை சேர்ந்தவர் காதர் பாட்ஷா (வயது30). அதேப்பகுதியை சேர்ந்தவர்கள் ஆவேஜ் (28), உவேஜ் (30). இவர்கள் 2 பேரும் சகோதரர்கள் ஆவர். இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக ஆவேஜ் கும்பலுக்கும், காதர் பாட்ஷா கும்பலுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதன் காரணமாக அவர்கள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த மாதம் ஆவேஜ் தனது சகோதரருடன் கடுகர ஓனி பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக காதர் பாட்ஷா தனது கூட்டாளிகளுடன் வந்தார். அவர்கள் ஆவேஜ், உவேஜ் ஆகிய 2 பேரை சரமாரியாக தாக்கினர்.

வாலிபருக்கு கத்திக்குத்து

இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்தநிலையில், கடந்த 10-ந்தேதி அப்பகுதியில் நடந்த திருமண விழாவில் பங்கேற்க காதர் பாட்ஷா வந்தார்.

அப்போது அங்கு தயார் நிலையில் இருந்த மர்மகும்பல் நிகழ்ச்சி முடிந்து வெளியே காதர் பாட்ஷாவை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றது. இதில் அவருக்கு 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கத்திக்குத்து விழுந்தது. மேலும் காதர் பாட்ஷா ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே கீழே விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக உப்பள்ளி கிம்ஸ் ஆஸ்பத்தி்ரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காதர்பாட்ஷா இறந்தார்.

5 பேர் கைது

இதுகுறித்து கசபாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மகும்பலை வலைவீசி தேடி வந்தனர். மேலும் அவர்களை பிடிப்பதற்கு தனிப்படையும் அமைக்கப்பட்டது. இந்தநிலையில், காதர்பாட்ஷாவை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் தொடர்புடையவர்கள் தார்வாரில் பதுங்கி இருப்பதாக கசபாபேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு பதுங்கி இருந்த ஆவேஜ், உவேஜ் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்