உப்பள்ளியில் கஞ்சா விற்ற 5 பேர் சிக்கினர்
|உப்பள்ளியில் கஞ்சா விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
உப்பள்ளி-
தார்வார் மாவட்டம் உப்பள்ளி டவுன் போலீஸ் எல்லைக்குட்பட்ட பெலகாவிகள்ளி பகுதியில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உப்பள்ளி டவுன் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் போலீசார் ரோந்து பணிக்கு சென்றபோது, அங்கு 5 பேர் நின்று கொண்டிருந்தனர்.
அவர்களை மடக்கி பிடித்த போலீசார் சோதனை செய்தனர். இந்த சோதனையில் அவர்களிடம் 1¼ கிலோ கஞ்சா தூள் இருந்தது. அதன் மதிப்பு ரூ.13 ஆயிரம் என்று கூறப்படுகிறது. அதனை பறிமுதல் செய்த போலீசார் 5 பேரையும் கைது செய்தனர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த வெங்கடேஷ் ரெட்டி (வயது 46), பழைய உப்பள்ளியை சேர்ந்த பரசுராம் (28), கணேஷ் பேட்டையை சேர்ந்த மஞ்சுநாத் (40), சுரேஷ் (32), ரஞ்சித் (26) என்று தெரியவந்தது. கைதான 5 பேர் மீதும் உப்பள்ளி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.